

புதுச்சேரி: புதுச்சேரியில் ரங்கசாமியின் மாநில அந்தஸ்து கோரிக்கை நிறைவேறுமா என்ற கேள்விக்கு மத்திய அமைச்சரும் பாஜக புதுச்சேரி மேலிடப் பொறுப்பாளருமான மன்சுக் மாண்டவியா கருத்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “தென்னிந்தியாவில் பாஜக வளர்ந்து வருகிறது. மக்களவைத் தேர்தலில் 16 சதவீதத்தை எங்கள் கட்சி பெற்றுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு டெல்லியில் பிரதமர் மோடியும், புதுச்சேரியில் ரங்கசாமியும் தலைவர்களாக உள்ளனர். புதுச்சேரியைப் பொறுத்தவரை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர் முதல்வர் ரங்கசாமிதான். வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு பாஜக எப்போதும் மரியாதை அளித்து வருகிறது.
பீகாரில், முந்தைய ஆட்சிக் காலத்தில் எங்கள் கூட்டணிக் கட்சியான ஜே.டி.யுவை விட அதிக இடங்களைப் பெற்றிருந்தாலும், அந்த மாநிலத்தின் முதலமைச்சராக நிதிஷ் குமாரை நாங்கள் ஆதரித்தோம். எங்கள் கூட்டணிக் கட்சிகளை நாங்கள் எப்போதும் மதிக்கிறோம்.
முதல்வர் ரங்கசாமி மாநில அந்தஸ்து கோரிக்கை வலியுறுத்தி வருகிறாரே, நிறைவேறுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “பிராந்திய கட்சிகளுக்கு அவற்றின் சொந்த விருப்பங்களும் உறுதிமொழிகளும் இருக்கும் பிராந்திய கட்சிகள் அவற்றின் சொந்த கருத்துக்களைக் கொண்டிருக்கும், மேலும் ஒரு தேசிய கட்சியாக எங்களுக்கும் எங்கள் சொந்த உறுதிமொழிகளும் கருத்துகளும் உள்ளன. கூட்டணியிலுள்ள பிராந்திய கட்சியின் கருத்துக்களை நாங்கள் எப்போதும் மதிக்கிறோம், அவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்ய முயற்சிக்கிறோம்” என்று அவர் கூறினார்.