டெல்டாவில் அதிமுகவின் சரிவை சரிகட்ட வியூகம்: பழனிசாமியின் ‘கணக்கு’ பலிக்குமா?

டெல்டாவில் அதிமுகவின் சரிவை சரிகட்ட வியூகம்:  பழனிசாமியின் ‘கணக்கு’ பலிக்குமா?
Updated on
1 min read

நாகப்பட்டினம்: அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு 27 தொகுதிகளையும், பாமகவுக்கு 18 தொகுதிகளையும், அமமுகவுக்கு 11 தொகுதிகளையும் ஒதுக்கியதன் மூலம் தொகுதி பங்கீட்டை வெகுசுமுகமாக முடித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதிலும் இதன்மூலம் டெல்டா பகுதியில் தங்கள் கூட்டணியை பலமானதாக மாற்றி இருக்கிறார் என்கிறார்கள்.

கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது மத்திய மண்டலத்தில் மொத்தம் உள்ள 41 தொகுதிகளில் வேதாரண்யம், நன்னிலம், ஒரத்தநாடு, விராலிமலை என 4 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வென்றது. மற்ற அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணியே வென்றது. டெல்டாவில் இப்படி அதிமுகவின் படுதோல்விக்கு முக்கிய காரணம் முக்குலத்தோர் வாக்குகள் கிடைக்காததுதான் என்று சொல்லப்பட்டது.

குறிப்பாக இங்கெல்லாம் பல தொகுதிகளில் அமமுக பெற்ற வாக்குகள் அதிமுகவின் தோல்விக்கு காரணமாக அமைந்தன. இதேபோல தென் மாவட்டத்தில் அதிமுகவின் தோல்விக்கு காரணம் அமமுகபிரித்த வாக்குகள்தான் என்று தெரியவந்தது. இந்த முறை அப்படி நடந்துவிடக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக சுட்டிக்காட்டித்தான் தினகரனை கூட்டணிக்கு உள்ளே கொண்டு வந்தது.

அந்த கருத்தை உள்வாங்கிக் கொண்ட எடப்பாடி பழனிசாமி தொகுதி பங்கீடு மூலம் அதை சாமர்த்தியமாக வெளிக்காட்டியிருக்கிறார். அமமுகவுக்கு வெறும் 6 அல்லது 7 தொகுதிகள்தான் ஒதுக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், 11 தொகுதிகளை ஒதுக்கி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதற்கு காரணம் டெல்டாவிலும், தென் மாவட்டங்களிலும் கடந்த தேர்தலில் ஏற்பட்ட சரிவை ஈடுகட்ட வேண்டும் என்ற எண்ணம்தான் என்கிறார்கள்.

இப்படி மரியாதையான எண்ணிக்கையில் தொகுதிகள் வழங்கப்பட்டிருப்பதால் தன் மீது அதிருப்தியில் இருக்கும் முக்குலத்தோரின் அதிருப்தி குறைந்து மீண்டும் தனக்கு சாதகமாக மாறுவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கணக்கிட்டிருக்கிறார். இதன்மூலம் அமமுக தொண்டர்களும் உற்சாகமாகவும் தீவிரமாகவும் பணியாற்றி கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவார்கள் என்று அவர் நம்புகிறார்.

டெல்டாவில் தலா 20 தொகுதிகளில் முக்குலத்தோர் வாக்குகளும், வன்னியர்கள் வாக்குகளும் அதிகம் இருப்பதாக கூறப்படும் நிலையில், இந்த இரண்டு சமூகத்துக்கும் உரிய முக்கியத்துவம் தந்து தொகுதிகளை ஒதுக்கி இருப்பதால் டெல்டா உள்ளடக்கிய மத்திய மண்டலத்தில் கடந்த முறை விட்டதை இந்த முறை பிடிக்க முடியும் என்று அதிமுக நம்புகிறது. அவர்களின் நம்பிக்கை தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்குமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

டெல்டாவில் அதிமுகவின் சரிவை சரிகட்ட வியூகம்:  பழனிசாமியின் ‘கணக்கு’ பலிக்குமா?
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சுமுக உடன்பாடு: பாஜக 27, பாமக 18, அமமுக 11 இடத்தில் போட்டி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in