

தருமபுரி: தருமபுரி மாவட்டம் அலகட்டு மலைக்கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை ‘டோலி’ கட்டி சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற நிலையில் சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் வட்டுவன அள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது அலகட்டு மலைக்கிராமம். 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்த மலைக் கிராமத்துக்கு பாலக்கோடு ஒன்றியத்தில் மலையடிவாரத்தில் உள்ள சீங்காடு பகுதியில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரம் ஆபத்தான மண் சாலையில் நடந்து தான் செல்ல முடியும். இளைஞர்கள் சிலர் உயிரை பணயம் வைத்து இந்த சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்கின்றனர்.
இங்கு வசிக்கும் மக்கள் விஷக்கடி உள்ளிட்ட அவசர மருத்துவ சிகிச்சைக்கு கூட சீங்காடு அடிவாரம் வரை நடந்து சென்றுதான் வாகனங்களில் பாலக்கோடு செல்ல முடியும். இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண்ணை டோலி கட்டி சிகிச்சைக்கு தூக்கிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அலகட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லிகா (25). இவருக்கு திருமணமாகி கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வட்டத்தில் உள்ள மஞ்சுமலை கிராமத்தில் வசித்து வருகிறார்.
அண்மையில் கவுரி நோன்புக்காக பெற்றோர் வீட்டுக்கு வந்த மல்லிகாவுக்கு நேற்று முன்தினம் நள்ளிரவுக்கு பின் கடும் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. அவரை மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்ல முயன்றபோது, அண்மையில் பெய்த மழையால் மண் சாலைகள் அரித்துச் செல்லப்பட்டிருந்ததால் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
எனவே, சீங்காடு அடிவாரம் வரை ‘டோலி’ கட்டி மல்லிகாவை அழைத்துச் சென்ற கிராம மக்கள் அங்கிருந்து ஆட்டோ மூலம் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அலகட்டு உள்ளிட்ட மலைக் கிராமங்களுக்கு விரைந்து சாலை அமைத்துத்தர வேண்டுமென்ற கோரிக்கை தற்போது வலுத்துள்ளது.
இதுகுறித்து, அங்குள்ள மலைக்கிராம மக்கள் சிலர் கூறியதாவது: அலகட்டு, ஏரிமலை, கோட்டூர் ஆகிய மலைக் கிராமங்களில் வசிப்பவர்கள் பாலக்கோடு ஒன்றியத்தில் உள்ள சீங்காடு அடிவாரம் வந்த பிறகு பாலக்கோடு நகரத்துக்குத் தான் முதலில் செல்ல முடியும். நிலவியல் ரீதியாக இவ்வாறு அமைந்துள்ள கிராமங்களை பென்னாகரம் ஒன்றியம் வட்டுவன அள்ளி ஊராட்சியில் இருக்கும்படி பிரித்ததே தவறான நடவடிக்கை. இதற்கிடையில், யானை, காட்டெருமை, கரடி, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடும் ஆபத்தான மண் சாலை வழியாக பலதலைமுறையாக நடந்து சென்று தான் வாழ்ந்து வருகிறோம்.
எங்கள் கிராமங்களுக்கு சாலை அமைக்க வேண்டும் என்ற அத்தியாவசியமான கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையிலேயே உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு பாம்புக் கடிக்கு உள்ளான சிறுமியை ‘டோலி’ கட்டி சிகிச்சைக்கு அழைத்துச் செல்லும் வழியில் பெற்றோர் கண்முன்னே சிறுமி உயிரிழந்த சம்பவம் எங்கள் உள்ளங்களில் வலித்துக் கொண்டே இருக்கிறது. இதற்கிடையில், 2018-ம் ஆண்டில் எங்கள் கிராமங்களுக்கு சாலை அமைக்க வனத்துறை அனுமதி பெற மாவட்ட நிர்வாகம் முயற்சி மேற்கொண்டது. ஆனால், 2020-ல் எங்கள் பகுதி காவிரி வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டதால் அப் பணியில் கடும் பின்னடைவு ஏற்பட்டது.
ஜனநாயக நாட்டில் மற்றவர்களைப் போல நாங்களும் அவசர சூழல்களுக்கு பாதுகாப்பான சாலையில் பயணிக்க, இன்னும் எத்தனை உயிர்களை நாங்கள் விலை கொடுக்க வேண்டியிருக்குமென தெரியவில்லை. வாழ்க்கை நிலையில் சுமார் 50 ஆண்டுகள் பின் தங்கியிருக்கும் மலைக் கிராம மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதிலும் அரசின் சட்டங்களும், விதிகளும் இவ்வளவு கடுமையாக பின்பற்றப்படுவதில் எள்ளளவும் நியாயமில்லை. இவ்வாறு கூறினர்.