அரசுக்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

அரசுக்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
Updated on
2 min read

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை அமைக்க அனுமதி மறுத்ததை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு மற்றும் மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுவட்டார கிராமத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். அதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர், நிலம் மற்றும் காற்று மாசடைவதாகக் கூறி அந்த ஆலையை மூட தமிழக அரசு கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் பசுமைத் தாமிர உற்பத்தி ஆலை அமைக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் கடந்த ஜன.9 அன்று தமிழக அரசுக்கு விண்ணப்பித்தது. இந்த விண்ணப்பத்தை தமிழக அரசு கடந்த ஜன.27 அன்று நிராகரித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அதில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்குள் பசுமைத் தாமிர உற்பத்தி ஆலை அமைக்க அனுமதி மறுத்து தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து, நீதிமன்ற கண்காணிப்பில் மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள், மத்திய சுற்றுச்சூழல் துறை, மத்திய சுரங்கத் துறையின் அதிகாரிகள், நிபுணர்கள் அடங்கிய பன்னோக்கு குழுவை அமைத்து பசுமைத் தாமிரம் உற்பத்தி ஆலை அமைப்பது குறித்து ஆய்வறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும். அந்த அறிக்கையின் அடிப்படையில் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் எனக் கோரியிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வேதாந்தா நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், விண்ணப்பத்தை நிராகரிக்கும் முன்பாக விளக்கமளிக்க அவகாசம் வழங்காததும் விதிகளுக்கு புறம்பானது. எனவே தூத்துக்குடியில் பசுமைத் தாமிர உற்பத்தி ஆலை அமைப்பது குறித்து மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், மத்திய சுற்றுச்சூழல் துறை, கனிம வளத்துறை நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என்றார்.

தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், ஏற்கெனவே தமிழக அரசால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்து, அதை புதுப்பிக்கும் நோக்கத்தில் ‘பசுமைத் தாமிரம்’ என மாற்று திட்டத்தை கையில் மனுதாரர் எடுத்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர், நிலம், காற்று என அனைத்தும் பாழாகிவிட்டது. புதிய மொந்தையில் பழைய கள் என்பது போல வேதாந்தா நிறுவனம் மீண்டும் தனது அஸ்திரத்தை ஏவி வருகிறது என்றார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, விதிகளின்படி விளக்கமளிக்க அவகாசம் வழங்கவில்லை என வேதாந்தா நிறுவனம் கூறுவதால் தொழில்நுட்ப ரீதியாக விளக்கமளிக்க அவகாசம் வழங்கலாமே என்றார். இதுதொடர்பாக அரசின் கருத்தை அறிந்து தான் பதிலளிக்க முடியும் என கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

அதையடுத்து நீதிபதிகள், ‘பசுமை தாமிர ஆலைக்கான சாத்தியக் கூறுகளை ஆராய நிபுணர்கள் குழுவை அமைப்பது தொடர்பாக தமிழக அரசு மற்றும் மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் பதிலளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டு விசாரணையை பிப்.26-க்கு தள்ளி வைத்தனர்.

அரசுக்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
‘ஆட்சியில் பங்கு கிடையாது’ - கறார் காட்டும் ஸ்டாலின்... கலக்கத்தில் காங்கிரஸ்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in