

மதுரை: ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப் படைக்கென மதுரை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் தனி காவல் நிலையம் ஏற்படுத்த உள்ள நிலையில் மகளிர் காவல் நிலையங்களில் வழக்கமான பணி பாதிக்கும் சூழல் உருவாகும் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுத்து, பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு ஜூன் மாதம் முதல் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடங்கப்பட்டது.
இதற்காக 2,500 புதிய பணியிடங்களும் உருவாக்கப் பட்டு, இப்படைக்கென புதிதாக ஆட்கள் தேர்வு செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி தற்போது ஒவ்வொரு மாவட்டம், மாநகராட்சி பகுதியில் எஸ்பி, துணை ஆணையர்கள் தலைமை யின் கீழ் சுமார் 30 வயதுக்கு உட்பட்ட தலா 4 எஸ்ஐக்கள், 8 பெண் காவலர்கள் 2 சுழற்சி முறையில் பணிபுரிகின்றனர். இவர்களுக்காக தனி வாகனமும் வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லுாரிகள், அதிக மாக பெண்கள் பணிபுரியும் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்காணிப்பது, பாலியல் தொல்லை குறித்து புகார் வரும் பகுதிக்கு சென்று நடவடிக்கை எடுக்க உதவி புரிவது போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர். இவர்களின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு தற்போது ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் கூடுதலாக தலா 4 எஸ்ஐக்கள், 8 பெண் காவலர்கள் மகளிர் காவல் நிலையங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் மாநகர பகுதியில் உதவி ஆணையர் மேற்பார்வையில் ஒரு ஆய்வாளர், 22 எஸ்ஐக்கள், 64 காவலர்கள் என்ற அடிப்படையில் 87 பேர் அடங்கிய எண்ணிக்கையில் தனி காவல் நிலையமாக சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை செயல்பட அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: பெரும்பாலும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை மகளிர் காவல் நிலையங்கள் மூலம் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றாலும், தவெக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக அளித்த வாக்குறுதியின்படி சிங்கப்பெண் அதிரடிப்படை உருவாக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இப்படையினர் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை பிடித்து சம்பந்தப் பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்து கின்றனர்.
இருப்பினும், இப்படைக் கென பிரத்தியேகமாக தனி காவல் நிலையம் ஏற்படுத்தினால் அவர்களே எப்ஐஆர் உள்ளிட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என நம்புகின்றனர்.
இதனடிப்படையில் மதுரை உட்பட அனைத்து மாவட்டங் களில் தேவைக்கேற்ப எண்ணிக் கையில் புதிதாக சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு புதிய காவல் நிலையம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தலாம் என அந்தந்த மாவட்ட காவல் துறை அலுவலகங்களுக்கு டிஜிபி அலுவலகத்தில் இருந்து சுற்றறிக்கை வந்துள்ளது.
இதன்மூலம் புதிய காவல் நிலையத்துக்கான இடம் தேர்வு, தேவையான காவல் துறையினரை தேர்ந்தெடுத்து விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்றாலும், இதற்காக புதிதாக ஆட்கள் தேர்வின்றி, தற்போது பணியில் இருக்கும் மகளிர் காவலர்களையே எடுப்பதால் பற்றாக்குறை ஏற்பட்டு, மகளிர் காவல் நிலையங்களில் வழக்கமான பணி பாதிக்கும் சூழல் உருவாகும், என்றனர்.