

புதுக்கோட்டை: ரேஷன் கடைகளிலும் சன்ன ரக அரிசி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில உணவுத் துறை அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் துளையானூர், கொன்னையூரில் கட்டப்பட்ட உணவுப் பொருள் சேமிப்பு வட்ட செயல்முறை கிடங்கை அமைச்சர் வெங்கடரமணன் நேற்று திறந்து வைத்தார். அப்போது, மாநில தொழிலாளர் நலத் துறை அமைச்சர் ஜெ.முகமது பர்வேஸ், ஆட்சியர் எம்.அருணா ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னதாக, செய்தியாளர்களிடம் அமைச்சர் வெங்கடரமணன் கூறியது: கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் மழைப்பொழிவு குறைந்ததால், அங்கிருந்து தமிழகத்துக்கு அரிசி வரத்து குறைந்தது. நவம்பர் மாதத்துக்குள் அரிசி வரத்து அதிகரிக்கும். இதனால், விலையும் கட்டுக்குள் வரும். அரிசி விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கூட்டுறவு அங்காடிகளில் சன்ன ரக அரிசி கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வருங்காலங்களில் ரேஷன் கடைகளில் மோட்டா ரக அரிசியின் விநியோகத்தைக் குறைத்து, சன்ன ரக அரிசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அரிசி விலை உயர்வுக்கு வரத்து குறைவும், பதுக்கலும் முக்கியக் காரணங்களாக உள்ளன. எனவே, கர்நாடகா, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் ரேஷன் அரிசிக் கடத்தலைத் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு கூறினார்.
மேலும் 25 ஆயிரம் டன் அரிசி
திருச்சி விமான நிலையத்தில் கூறும் போது, ‘கூட்டுறவு அங்காடிகளில் கிலோ ரூ.30-க்கும் விற்கப்படும் சன்ன ரக அரிசிக்கு மக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளதால், மேலும் 25 ஆயிரம் டன் அரிசி விநியோகிக்க விற்பனைக்கு வழங்கப்பட உள்ளது. இதனால் இனி வரும் காலங்களில் அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு விரைவில் குறையும்’ என்றார்.