

விமலா
சென்னை: லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் விமலாவின் பணியிடை நீக்கத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நிறுத்தி வைத்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
சென்னை பாலியல் தடுப்புப் பிரிவு ஆய்வாளராக பணிபுரிந்த ஆய்வாளர் ராஜலட்சுமி என்பவர் மீது வழக்குப் பதிவு செய்தார் என்பதற்காக லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளரான விமலா கடந்த ஜூன் 17-ம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
தனது பணியிடை நீக்கத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் விமலா மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, அவரது பணியிடை நீக்கத்துக்கு இடைக்காலத் தடை விதித்து விசாரணையை ஜூலை 9-ம் தேதிக்கு தள்ளி வைத்திருந்தார்.
இந்நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரான விமலாவுக்கு எதிராக ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக தீவிரமான குற்றச்சாட்டு உள்ளதாகவும், அதன் காரணமாகவே அவர் இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் கவுதமன் வாதிட்டார்.
அதையடுத்து பெண் ஆய்வாளரான விமலாவை இடைநீக்கம் செய்தது தொடர்பான ஆதாரங்களை தனி நீதிபதி முன்பாக சமர்ப்பிக்க அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அவரது இடைநீக்கத்துக்கு தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவை நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.