

நாமக்கல்: தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தனராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம், இருசக்கர வாகனம், கார், லாரிகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் டிச. 17 முதல் தகுதிச் சான்றிதழ் கட்டணத்தை (எப்.சி.) உயர்த்தி அறிவித்தது.
வாகனத்தின் தயாரிப்பு ஆண்டை அடிப்படையாக கொண்டு எப்.சி. கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது. பல மாநிலங்கள் கட்டண உயர்வை நிறுத்தி வைத்துள்ள நிலையில், தமிழகத்திலும் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தோம்.
எங்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லை. உயர்த்தப்பட்ட கட்டணத்தை செலுத்தி எப்.சி. பெற முடியாமல் மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட லாரிகள் ஆங்காங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கடந்த 17-ம் தேதி நாமக்கல்லில் நடைபெற்ற சம்மேளன செயற்குழுக் கூட்டத்தில், தமிழகத்தில் எப்.சி. கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி பிப். 25 முதல் மாநிலம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்ட 8 மணி நேரத்தில், 3 மாதங்களுக்கு எப்.சி.க்கு புதிய கட்டணம் வசூலிப்பதை தற்காலிமாக நிறுத்திவைத்து, பழைய கட்டணமான ரூ.800 மட்டும் செலுத்தி லாரிகளுக்கு எப்.சி. சான்று பெறலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், போக்குவரத்து ஆணையர் மற்றும் சம்மேளன நிர்வாகிகள் அடங்கிய குழு ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளதால், அக்குழுவின் கூட்டத்தில் 3 மாதத்தில் எப்.சி. கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக பேசி முடிவு செய்யலாம் என்றும் மாநில போக்குவரத்து ஆணையர் உறுதியளித்துள்ளார்.
எனவே, வரும் 25-ம் தேதி முதல் நடைபெறவிருந்த லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் தள்ளி வைக்கப்படுகிறது. லாரிகள் வழக்கம்போல இயங்கும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.