அரசு பள்ளி மாணவர்களின் பின்புல தகவல்களை சேகரிக்கும் அரசாணை ரத்து - ஐகோர்ட் உத்தரவு

அரசு பள்ளி மாணவர்களின் பின்புல தகவல்களை சேகரிக்கும் அரசாணை ரத்து - ஐகோர்ட் உத்தரவு

Published on

மதுரை: அரசு பள்ளி மாணவர்களின் பின்புலத் தகவல்களைச் சேகரிக்கும் அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.

மதுரையைச் சேர்ந்த அமீர் ஆலம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களின் பின்புலத் தகவல்களைச் சேகரிக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி பள்ளி மாணவர்கள் மீது வழக்கு எதுவும் நிலுவையில் உள்ளதா? தாய், தந்தையர் சிறையில் உள்ளனரா? அவர்கள் அகதிகளா என்பது உட்பட பல்வேறு விவரங்களை தலைமையாசிரியர்கள் மூலம் சேகரித்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்ப வேண்டும். இது சட்டத்துக்கு புறம்பானது.

பள்ளி வகுப்பறையில் இந்த விவரங்களைச் சேகரிப்பதால் ஒவ்வொரு மாணவனின் தனிப்பட்ட தகவல்களும் மற்ற மாணவர்களுக்குத் தெரிய வரும். இது அந்த மாணவனுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வழிவகுக்கும். மாணவர்களின் தகவல்களைச் சேகரிக்கும்போது சம்பந்தப்பட்ட மாணவனின் சமூகச் சூழலைப் பாதிக்காதவாறு ரகசியம் காக்கப்பட வேண்டும். எதற்காக மாணவர்களின் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.

எனவே, அரசுப் பள்ளி மாணவர்களின் பின்புலத் தகவல்களைச் சேகரிக்கும் நடைமுறைக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள், ‘மாணவர்களின் பின்புலத் தகவல்களைச் சேகரிப்பது சட்டத்துக்குப் புறம்பானது. மாணவர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல். மாணவர்களின் தனியுரிமையைப் பாதிக்கும். இதனால் மாணவர்களின் பின்புலத் தகவல்களைச் சேகரிக்க அரசு தரப்பில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து செய்யப்படுகிறது’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அரசு பள்ளி மாணவர்களின் பின்புல தகவல்களை சேகரிக்கும் அரசாணை ரத்து - ஐகோர்ட் உத்தரவு
டெல்லி செங்கோட்டை குண்டு வெடிப்பில் தொடர்புடைய மருத்துவர்கள் அப்பாவிகள் பெயரில் சிம் கார்டுகள் வாங்கி பயன்படுத்தியது அம்பலம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in