

ஸ்ரீநகர்: டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவர்கள், அப்பாவி மக்கள் பெயரில் வாங்கப்பட்ட சிம் கார்டுகளை தீவிரவாத தொடர்புக்கு பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்தது.
டெல்லி செங்கோட்டை அருகே கடந்தாண்டு நவம்பர் 10-ம் தேதி நடைபெற்ற கார் குண்டு வெடிப்பில் 15 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில், ஈடுபட்ட மருத்துவர்கள், பாக். தீவிரவாதிகளுடன் பேச அப்பாவி மக்களின் பெயரில் வாங்கப்பட்ட சிம் கார்டுகளை பயன்படுத்தியுள்ளனர். வாட்ஸ் ஆப், டெலிகிராம் போன்ற செயலிகள் மூலம் இவர்களின் தகவல் தொடர்பு நடைபெற்றுள்ளது.
இதையடுத்து வாட்ஸ் ஆப், டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்ற தகவல் தொடர்பு செயலிகள், செயல்பாட்டில் உள்ள சிம் கார்டுடன் இணைந்திருக்க வேண்டும் என தொலை தொடர்புத்துறை உத்தரவிட்டது.
குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மருத்துவர்கள் முசமில் கானே, அதீல் ரேத்தர், உமர் உட்பட பலர் பாதுகாப்பு ஏஜென்சிகளிடம் இருந்து தப்பிக்க ஒன்றுக்கும் மேற்பட்ட போன்களை பயன்படுத்தியுள்ளனர். இவற்றில் ஒரு போனில் அவர்கள் பெயரில் வாங்கப்பட்ட சிம் கார்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.
அந்த போனை தனிப்பட்ட மற்றும் அலுவலக தொடர்புக்கு பயன்படுத்தியுள்ளனர். தீவிரவாத தகவல் தொடர்புக்கு மற்றொரு போனை பயன்படுத்தியுள்ளனர். இதன் சிம் கார்டுகள், அப்பாவி மக்களின் ஆதார் கார்டுகளை தவறாக பயன்படுத்தி வாங்கப்பட்டுள்ளன. சிலர் போலி ஆதார் அட்டைகளை பயன்படுத்தியும் சிம் கார்டுகளை பெற்றுள்ளனர். சில தகவல் செயலிகள் சிம் கார்டு இல்லாமாலும் செயல்படுகின்றன. அதன் மூலமாக இவர்கள் வெடிகுண்டு தயாரிப்பை கற்றுள்ளனர்.
இதையடுத்து செயல்பாட்டில் உள்ள சிம் கார்டு பொருத்தப்பட்ட செல்போன்களில் மட்டும் தகவல் தொடர்பு செயலிகள் இயங்குவது உறுதி செய்யப்பட வேண்டும் என தகவல் தொடர்பு நிறுவனங்களுக்கு, தொலை தொடர்புத்துறை உத்தரவிடப்பட்டுள்ளது. சிம் கார்டுகள் இல்லாமல் தகவல் தொடர்பு செயலிகளை பயன்படுத்தும் அம்சம் தவறாக பயன்படுத்தப்படுவதால், இது தொலைதொடர்பு சைபர் பாதுகாப்புத்துறைக்கு சவாலாக உள்ளது. வெளிநாடுகளில் இருந்தும் சைபர் மோசடியில் ஈடுபடவும் இந்த அம்சம் உதவுகிறது.
தொலை தொடர்பு துறையின் இந்த உத்தரவு, ஜம்மு காஷ்மீரில் விரைவாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. முறைகேடாக பெறப்பட்ட சிம்கார்டுகள் எல்லாம் செயலிழக்கம் செய்யப்படுகின்றன. தொலைதொடர்பு சைபர் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.