

புதுச்சேரி: புதுச்சேரி அரசு சார்பில் 21 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு சார்பில் ஆண்டுதோறும் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான (2026) ஆண்டுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது - 4, முதல்வரின் சிறப்பு விருது - 7, கல்வியமைச்சரின் வட்டார விருது - 10 என மொத்தம் 21 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி காலாப்பட்டு குப்பம் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ரமா, காரைக்கால் கோட்டுச்சேரிபேட் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் வீரசுந்தரம், கோர்க்காடு அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை (அறிவியல்) அனுசுயா, காலாப்பட்டு செவாலியர் செல்லான் அரசு மேல்நிலைப்பள்ளி விரிவுரையாளர் (தாவிரவியல்) ரவிக்குமார் (எ) ஜெயச்சந்திரன் ஆகியோருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்திரா நகர் இந்திரா காந்தி அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை (தமிழ்) கலைச்செல்வி, வில்லியனூர் பேட் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ரேணுகா, கோட்டுச்சேரி அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை மஞ்சுளா, முத்தியால்பேட்டை காமராஜ் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை (சமூக அறிவியல்) வானதி, நாவற்குளம் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை தமிழ்ச்செல்வி, மேல்சாத்தமங்கலம் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை நித்தியா, நல்லவாடு அரசு நடுநிலைப்பள்ளி நுண்கலை ஆசிரியர் சுகுமாரன் ஆகியோருக்கு முதல்வரின் சிறப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏம்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) ஜானகிராமன், சொசியெத்தே புரோகிரேசீஸ்த் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை லதா, தர்மாபுரி அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை மஞ்சுபார்கவி, லாஸ்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை (கணிதம்) பார்வதி, முத்திரையர்பாளையம் இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கலியுவராஜா, கல்வே காலேஜ் பிரெஞ்சு உயர்நிலைப்பள்ளி ஆசிரியை ராஜவந்திகா ஆகியோருக்கு கல்வியமைச்சரின் வட்டார விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டுச்சேரி சர்வீட் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியை செங்கோல் லில்லி, காரைக்கால் அன்னை தெரேசா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி விரிவுரையாளர் சிவக்குமார், மாஹே செம்பரா அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை சிந்து, ஏனாம் பராம்பேட்டா அம்பேத்கர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் நிதி சத்யா ஹரி சந்திர ராவ் ஆகியோருக்கு கல்வியமைச்சரின் வட்டார விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் செப்.(5) புதுச்சேரி பள்ளி கல்வித்துறை சார்பில் கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெறும் ஆசிரியர் தின விழாவில் 21 ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த விருதினை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவை தற்காலிக தலைவர் அன்பழகன், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியொர் வழங்குகின்றனர். மேலும் ஓய்வு பெற்ற ஆசிரியர்களும் கவுரவிக்கப்பட உள்ளனர்.