

சென்னை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இந்த ஆண்டு ஒருமுறை மட்டும் கார்த்திகை தீபத் திருநாளில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
அந்த உத்தரவில், ‘திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற ஒருமுறை மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. எனவே, வரும் கார்த்திகை தீபத்தன்று (நவ.24) ஒருநாள் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கப்படுகிறது. அதேநேரத்தில், ஒருமுறை அனுமதி அளிப்பது பின்னாளில் ஒரு முன்னுதாரணமாக மாறிவிடக்கூடும் என்பதால் ஏற்படும் அபாயங்களை நீதிமன்றம் உணர்ந்திருக்கிறது. எனினும், உயர் நீதிமன்றத்தின் இரு வெவ்வேறு அமர்வுகள் தீபம் ஏற்ற அனுமதி அளித்திருப்பதை நீதிமன்றம் கவனத்தில் கொள்கிறது.
அதேசமயம், தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை ஓர் இன்றியமையாத நடைமுறையாக உறுதி செய்து கடந்த ஜனவரி 6 அன்று சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் இறுதி கருத்துகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. நவம்பர் 24 அன்று தீபம் ஏற்றும் குழுவில் இடம் பெறுபவர்களை கோயில் நிர்வாகம் மட்டுமே தீர்மானிக்க வேண்டும்.
இந்த நிகழ்வுக்கான பொறுப்பு அதிகாரியாக மதுரை மாவட்ட ஆட்சியர் செயல்படுவார். பாதுகாப்பு ஏற்பாடுகளை மதுரை மாவட்ட காவல் ஆணையர் மேற்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால், மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்களைக் கொண்டு பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊர்வலங்கள் நடத்தவோ, முழக்கங்களை எழுப்பவோ அல்லது பொதுமக்கள் ஒன்றுகூடவோ அனுமதி இல்லை. தீபம் ஏற்றும் இடத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட நபர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.
தீபம் ஏற்றியவுடன் அந்த குழுவினர் உடனடியாக தீபத்தூண் பகுதியில் இருந்து வெளியேற வேண்டும். அங்கு தற்காலிகமான அல்லது நிரந்தரமான எந்தவொரு அமைப்பையும் விட்டுச் செல்லக்கூடாது. மலையில் உள்ள தர்கா உட்பட எந்தவொரு மதச் சின்னத்துக்கும் எவ்வித சேதமோ அல்லது மாற்றமோ செய்யக் கூடாது. தர்காவுக்குச் செல்லும் பக்தர்களின் வழிபாடடு உரிமையிலோ அல்லது அவர்கள் தர்காவை பயன்படுத்துவதிலோ எந்தவித இடையூறும் செய்யக்கூடாது.
தீபத்தூண் மீது விளக்கேற்ற அனுமதிக்கும் இந்த இடைக்கால உத்தரவு யாருக்கும் எந்தவொரு சட்டப்பூர்வமான உரிமையையும் வழங்காது. வரும் ஆண்டுகளில் இதை ஒரு முன்னுதாரணமாகக் கருதக் கூடாது. மாநில அரசு எழுப்பிய சிக்கல்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்படும். நவம்பர் 24 ன்று தீபத்திருவிழா நடைபெற உள்ள நிலையில், உடனடி மற்றும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டே இந்த தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நவம்பர் 24-ம் தேதிக்கான இந்த அனுமதி, ஓர் இன்றியமையாத மத நடைமுறையாக அங்கீகரிக்கப்பட்டதாக எவரும் கருதவோ அல்லது முடிவு செய்யவோ கூடாது. வெவ்வேறு நம்பிக்கை கொண்டவர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதையுடன் தங்கள் மத உரிமைகளைப் பின்பற்ற வேண்டும். இந்த நிகழ்வு முடிந்த மூன்று நாட்களுக்குள் இது குறித்த நிலை அறிக்கையை மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் தமது இடைக்கால் உத்தரவில் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு குறித்த தலைவர்களின் கருத்துகள்...
திமுக தலைவர் ஸ்டாலின்: “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசு கடுமையாகப் போராடி தமிழகத்தின் அமைதி, மதநல்லிணக்கத்தை நிலைநாட்டியது. தவெக அரசு அடுத்தகட்டமாக என்ன சட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது என்பதை முதல்வர் விளக்க வேண்டும்.”
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: “பல ஆண்டுகளாக இந்துக்களின் கண்ணில் குடிகொண்டிருந்த ஏக்கம் பஞ்சாகப் பறந்துவிட்டது. மத நல்லிணக்கம் என்ற பெயரில் இந்துக்களின் அடையாளங்களை திட்டமிட்டு அழிக்கத் துடித்தவர்களின் சதித் திட்டங்களை இந்தத் தீர்ப்பு தவிடுபொடி ஆக்கியுள்ளது.”
விசிக தலைவர் திருமாவளவன்: “இந்தத் தீர்ப்பு வியப்பும், அதிர்ச்சியும் அளிக்கிறது. மதவாத சக்திகள் குழப்பம் ஏற்படுத்த இது வழிவகுக்கும். அரசு விழிப்போடு இருக்க வேண்டும்.”
முன்னாள் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்: “இறை நம்பிக்கை, வழிபாட்டு உரிமை ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை. பக்தர்களின் நீண்டகாலக் கோரிக்கையில் உள்ள நியாயத்தை ஏற்று, தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதில் மகிழ்ச்சி.”
பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை: “இந்த ஆண்டு மட்டும் தீபம் ஏற்றலாம் என்ற தீர்ப்பு ஓரளவு மகிழ்ச்சி. வெற்றுத் தூணைப் பார்க்க வேண்டும் என்று இந்த ஆட்சி நினைத்தாலும், விளக்கேற்றிய வெற்றித் தூணை நாம் பார்க்கப் போகிறோம் என்ற வகையில் மகிழ்ச்சிதான்.”
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன்: “ஒரே ஒருநாள் மட்டும் தீபம் ஏற்றலாம் என்பது, புதிய முறையை அறிமுகம் செய்வதும், சமூக நல்லிணக்கத்துக்கு பேராபத்தை ஏற்படுத்துவதும் ஆகும். இதை நீதிமன்றம் கருத்தில் கொள்ளாதது வியப்பு.”
பாஜக தன்னார்வத் தொண்டு நிறுவனப் பிரிவு மாநில தலைவர் அர்ஜுனமூர்த்தி: “நீதிமன்றத் தீர்ப்பை மதிப்பதும், முழுமையாகப் பின்பற்றுவதும் ஒவ்வொரு குடிமகனின் கடமை. இதை ஒரு மதத்தின் வெற்றியாகவோ, தோல்வியாகவோ பார்க்க அவசியம் இல்லை.”
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம்: “நில அளவைக் கல்லில் தீபம் ஏற்றுவது சரியல்ல என்பதை ஆதாரங்களுடன் முன்வைத்த நிலையில், இடைக்காலமாக தீபம் ஏற்றலாம் என்ற தீர்ப்பு நியாயமற்றது. இதற்கு எதிராக தமிழக அரசு உடனே மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.”
மமக தலைவர் ஜவாஹிருல்லா: “தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது வரவேற்கத்தக்கது. ஆனாலும், அதே சர்ச்சைக்குரிய இடத்தில் ஒருமுறை தீபம் ஏற்ற அனுமதி அளித்தது ஆழ்ந்த கவலை, அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.”
வீ த லீடர் அமைப்பின் தலைவர் அண்ணாமலை: “பாரம்பரிய நடைமுறை, பக்தர்களின் நீண்டகால கோரிக்கையை கருத்தில் கொண்டு, இனிவரும் ஆண்டுகளிலும் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிமன்றம் நிரந்தர தீர்வு வழங்கும் என நம்புகிறோம். எவ்வித இடையூறும் இன்றி தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுவதை தவெக அரசு உறுதி செய்யும் என எதிர்பார்க்கிறோம்.”
மஜக தலைவர் தமிமுன் அன்சாரி: “சர்ச்சைக்குரிய எல்லைத் தூணில் ஒருநாள் மட்டும் தீபம் ஏற்ற அனுமதி என்ற தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனைவரும் இந்த சூழ்நிலையை பொறுமை, நிதானத்துடன் எதிர்கொள்ள வேண்டும்.”
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி: “உச்ச நீதிமன்றம் ஒருநாள் அனுமதி அளித்துள்ளதை முழு மனதோடு வரவேற்கிறேன். இதனை தமிழக அரசு எந்தக் காரணத்தை கொண்டும் தடுக்கும் முயற்சியில் ஈடுபடக் கூடாது. நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அரசு அதிகாரிகள் ஒருங்கிணைந்து பாதுகாப்பு கொடுத்து நடைமுறைப்படுத்த வேண்டும்.”
எஸ்டிபிஐ மாநில தலைவர் உமர் பரூக்: “இந்த உத்தரவு சட்டரீதியான முரண்பாடுகளைக் கொண்டுள்ளது. தற்காலிக அனுமதி தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும்.”