

சென்னை: திமுக வாக்குச்சாவடி முகவர்கள் இன்னும் 2 நாட்கள் ஓய்வின்றி உழைக்க வேண்டும். தேர்தல் நாளில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 23-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், தேர்தல் பணிகள் தொடர்பாக திமுக வாக்குச்சாவடி முகவர்கள் சுமார் 75 ஆயிரம் பேருடன் கட்சித் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் நேற்று ‘கால் பிரிட்ஜிங்’ தொழில்நுட்பம் மூலமாக செல்போனில் கலந்துரையாடினார்.
அப்போது, அவர் பேசியதாவது: திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய இன்னும் 2 நாட்கள் முழு மூச்சுடன் ஓய்வின்றி உழைக்க வேண்டும். ஒவ்வொரு வாக்கும் மிக முக்கியம். மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை சட்டத்தை கொண்டு வர முயன்றது. அந்த சதியை போராடி வென்றோம்.
சட்டப்பேரவையில் நாம் வலுவாக இருக்கும் வரை டெல்லியால் தமிழகத்தின் உரிமைகளைத் தொட முடியாது. எனவே, ஒவ்வொரு வாக்குச்சாவடி முகவரும் 2 நாட்கள் அவரவர் வாக்குச்சாவடிக்கு உட்பட்ட வீடுகளுக்கு மீண்டும் ஒருமுறை சென்று ஆதரவு கேட்க வேண்டும்.
திமுக கூட்டணிக்கு ஆதரவான வாக்குகள் ஒன்றுகூட விடுபடக்கூடாது. தன்னார்வலர்களை தயார் நிலையில் வைக்க வேண்டும். வாகன வசதிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். முதியோர், மாற்றுத் திறனாளிகள் எளிதில் வந்து வாக்களிக்க, அவர்களை நேரில் சென்று அழைத்துவர ஏற்பாடு செய்ய வேண்டும்.
எதிர்க்கட்சியினர் முறைகேடுகளில் ஈடுபட முயற்சிக்கலாம். எனவே, ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் விழிப்புடன் இருக்க வேண்டும். விதிமீறலோ, முறைகேடோ நடந்தால் உடனேவார் ரூம் எண்ணுக்கு (08069446900) அழைத்து புகார் அளிக்க வேண்டும்.
தேர்தல் நாளில் வாக்குப்பதிவு தொடங்கி, கடைசி வாக்குபதிவாகும் வரை அங்கு இருக்க வேண்டும். வாக்குப்பதிவு முடிந்த பிறகு, பதிவான வாக்குகளை உறுதிப்படுத்தி, வார் ரூமுக்கு தகவல் தெரிவித்து, படிவம் 17-ஐ சேகரித்த பிறகுதான் ஓய்வெடுக்க வேண்டும்.
தேர்தல் முடிவுகள் வரும் போது, ஒவ்வொரு தொகுதியிலும் அதிக வாக்குகளைப் பெற்றுத் தந்த வாக்குச்சாவடி முகவரை நேரில் சந்தித்துப் பாராட்டுவேன். தமிழக மக்களின் பேராதரவோடு அடுத்தமாதம் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைப்பது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.