

சென்னை: அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைமை நிலையச் செயலாளர் பூச்சி முருகனை கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தி்த்து நலம் விசாரித்தார்.
திமுக தலைமை நிலையச் செயலாளரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவருமான பூச்சி எஸ்.முருகன், கடந்த மாதம் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை மாவட்ட மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றார்.
அதைத் தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒரு மாதகாலமாக சிகிச்சையில் உள்ள அவர் தற்போது உடல்நலம் தேறி வருகிறார்.
இந்நிலையில், அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பூச்சி முருகனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்து நலம் விசாரித்தார்.
அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விரிவாக கேட்டறிந்த ஸ்டாலின், விரைவில் முழுமையாக குணமடைந்து பொதுப்பணிக்கு திரும்ப வேண்டும் என தனது விருப்பத்தையும் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இவர்களை தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் கருணாஸ் உள்ளிட்ட நிர்வாகிகளும் பூச்சி முருகனை சந்தித்து நலம் விசாரித்தனர்.