‘அவசர முடிவெடுக்க ஸ்டாலினுக்கு அதிகாரம்’ - திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம்

‘அவசர முடிவெடுக்க ஸ்டாலினுக்கு அதிகாரம்’ - திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம்
Updated on
2 min read

சென்னை: தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதையொட்டி அரசியல், நிர்வாக நிலைமைகளை ஆராய்ந்து அவசர முடிவுகளை உடனடியாக எடுக்கும் அதிகாரத்தை மு.க.ஸ்டாலினுக்கு வழங்கி இன்று நடைபெற்ற திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக எம் எல் ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில், காங்கிரஸ் தனது பழைய குணத்தை மாற்றிக்கொள்ளவில்லை என்றும், திமுக கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், நிலையான ஆட்சியமைய அவசர முடிவெடுக்க ஸ்டாலினுக்கு அதிகாரம் வழங்கியும், மதவாத சக்திகளுக்கு இடமளிக்க கூடாது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திமுக எம் எல் ஏக்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:

1) நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும், இந்த வெற்றிக்காகத் தோளோடு தோள் நின்று பாடுபட்ட தோழமை இயக்கங்களுக்கும் இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகாமல் போனாலும் கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியானது நம்மை விட 17.43 லட்சம் வாக்குகளை மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. நமக்கும் அவர்களுக்குமான வாக்கு விழுக்காடு வேறுபாடு என்பது 3.52 விழுக்காடு மட்டுமே. அந்த வகையில் வலிமையான, அதிக அளவிலான நம்பிக்கையை தமிழ்நாட்டு மக்கள் வைத்துள்ளார்கள் என்பதே உறுதியாகிறது.

2) சட்டமன்றத் தேர்தல் களத்தில் தலைவர் மு.க.ஸ்டாலினின் உழைப்பு மலையளவு ஆகும். தினந்தோறும் பொதுக்கூட்டங்கள் வாயிலாக முழங்கினார். நடைபயணங்களின் மூலமாக பல கிலோ மீட்டர் தூரம் நடந்தும் மக்களோடு கலந்துரையாடினார்கள். லட்சக்கணக்கான மக்களை தனித்தனியாகச் சந்தித்ததும் அவரின் சாதனை ஆகும். இத்தகைய மு.க.ஸ்டாலினுக்கு இக்கூட்டம் தனது இதயத்தின் அடித்தளத்தில் இருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

3) நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத வகையில் முடிவுகள் வந்துள்ளது. இது நெருக்கடியான, சிக்கலான காலகட்டம் ஆகும். இன்னொரு தேர்தலுக்கு தமிழ்நாடு தயாராக இல்லாத நிலையில், தமிழ்நாட்டில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதே நமது முதன்மை நோக்கம். அதே வேளையில், திராவிட இயக்கத்தின் கொள்கைகளுக்கு ஊறு விளைவிக்கும் மதவாத சக்திகளுக்கு இடமளிக்கக் கூடாது என்பது உள்ளிட்டவற்றையும் பரிசீலித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

கடந்த ஐந்தாண்டு காலத்தில் திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்படுத்திய திட்டங்கள் அப்படியே தொய்வின்றி தொடர்ந்தால் தான் தமிழ்நாடு அதே வேகத்தில் வளர்ச்சியைத் தக்க வைக்க முடியும் என்பதும் நமது விருப்பம் ஆகும். இத்தகைய சூழலில் உருவாகும் அரசியல், நிர்வாக நிலைமைகளை ஆராய்ந்து அவசர முடிவுகளை உடனடியாக எடுக்கும் அதிகாரத்தை மு.க.ஸ்டாலினுக்கு வழங்குவது என இக்கூட்டம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.

4) மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகுவதாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சி எடுத்த நிலைப்பாடு கடும் கண்டனத்துக்குரியது ஆகும். காங்கிரஸ் கட்சி தனது பழைய குணத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது.

ஒரு மாநிலங்களவை இடத்தையும் 28 சட்டமன்றத் தொகுதிகளையும் நமது தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி பெற்றது. கூட்டணிக் கட்சித் தொண்டர்களின் உழைப்பால் பெற்ற வெற்றியைப் பணயம் வைத்து மாற்று அணிக்கு மூன்று நாட்களுக்குள் காங்கிரஸ் கட்சி மாறியது. கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே கூட்டணிக்கு எதிரான கருத்தை அக்கட்சியினர் சொன்னதை காங்கிரஸ் கட்சி தடுக்கவும் இல்லை; கண்டிக்கவும் இல்லை.

புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. இடம்பெற்றது. தி.மு.க.வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்ட கொடுமையும் நடந்தது. அதைவிடக் கொடுமை என்ன என்றால், அப்படி போட்டியிட்ட வேட்பாளர்கள், அதன் தலைவரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற காட்சியும் நடந்தது. அதாவது, தேர்தலுக்குப் பிறகு அல்ல, தேர்தல் நடக்கும்போதே உண்மையாக நடந்து கொள்ளாத கட்சிதான் காங்கிரஸ் கட்சி.

அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு, பெருந்தன்மையோடும் பொறுப்போடும் நடந்துகொண்ட ஸ்டாலினுக்கு நேரில் வந்து வெற்றி பெற்றதற்காக ஒரு நன்றி கூட தெரிவிக்காது, முதுகில் குத்தி, மாபெரும் துரோகத்தைச் செய்துள்ளது காங்கிரஸ் கட்சி.

பா.ஜ.க. பல மாநிலங்களில் எதைச் செய்கிறதோ, அதையே காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் நமக்குச் செய்துள்ளது. தோழமை சக்தியின் காலை வாரி, நட்பு சக்திகளுக்குத் துரோகம் செய்த காங்கிரஸ் கட்சியின் திடீர் மாற்றத்தைக் இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

‘அவசர முடிவெடுக்க ஸ்டாலினுக்கு அதிகாரம்’ - திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம்
தவெக ஆட்சிக்கான தடைகளை தகர்ப்பாரா விஜய்? - முன்னுதாரண ‘சம்பவங்கள்’ | ஒரு பார்வை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in