

சென்னை: மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஆண்டுதோறும் டிச. 3-ம் தேதி சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
அவர்களது சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் மாநில அரசு விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது. மேலும், சம உரிமை, சம வாய்ப்புகள் வழங்கி, அவர்கள் சுயமரியாதையுடன் வாழ வழிசெய்கிறோம்.
ஐ.நா. சபை அறிவிப்பு: நடப்பாண்டு ஐ.நா. சபை ‘மாற்றுத் திறனாளிகளை உள்ளடக்கிய சமுதாயம் வளர, சமூக ஏற்றம் மலரும்’ என்று அறிவித்துள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
‘தமிழ்நாடு உரிமைகள் திட்டம்’ மூலம் மாற்றுத் திறனாளிகள் வசிக்கும் பகுதிகளிலேயே மறுவாழ்வு சேவைகள் அனைத்தும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர்களது வயது, உடல் நலத்துக்கு ஏற்ற சிகிச்சைகள் மற்றும் நவீன உதவி உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. நகர்ப்புறம், கிராமங்களில் வீட்டு மனைகள் மற்றும் வீடுகள் ஒதுக்கப்படுகின்றன.
மாற்றுத் திறனாளிகளையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்கி, அவர்களது வாழ்வு சிறக்க அனைவரும் பாடுபடுவோம். இவ்வாறு செய்திக்குறிப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.