

திருவாரூர் அருகே நேற்று நடைபெற்ற முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்ல திருமண விழாவில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
திருவாரூர்: திமுகவில் இனி கூட்டணியே வேண்டாம் என்பது பற்றி பரிசீலிப்போம் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் அருகே காட்டூரில் உள்ள கலைஞர் கோட்டத்தில் முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்லத்திருமண விழாவில் அவர் பேசியதாவது: தமிழகம் முழுவதும் இன்று ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. ஒரு பக்கம் மின்வெட்டு பிரச்சினை, மறுபக்கம் மேட்டூர் அணையில் குறித்த நேரத்தில் தண்ணீர் திறக்க முடியவில்லை. இவற்றையெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசினால், அதற்கு உரிய பதிலை கூறாமல், முதல்வராக உள்ளவர் எங்கே உங்கள் அப்பாவை காணோம் என்கிறார். அப்பாவை அங்கே தேடாதீர்கள், மக்கள் மனதில் பதிந்திருக்கிறார்.
சட்டப் பேரவையில் நான் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் மன்றத்தில் நான் இருக்கிறேன். கடந்த 60 வருடங்களாக மக்களோடு மக்களாகத்தான் பணியாற்றி வருகிறேன். முதல்வராக நான் ஆய்வுக் கூட்டம் நடத்தியதைப்போல யாரும் செய்திருக்க மாட்டார்கள். கோட்டையில்தான் கோப்புகள் உள்ளன. அதை எடுத்துப் பாருங்கள். மகளிருக்கு கலைஞர் உரிமைத்தொகை, புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற திட்டங்களில் எல்லாம் நான் கையெழுத்திட்டுள்ளேன். அங்கெல்லாம் நான் இருக்கிறேன்.
எனவே, என்னை தேடிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. மக்களோடுதான் இருக்கிறேன். முதல்வராக இருந்த அண்ணா, நமது மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்தது ஒன்றே போதும். இந்த தமிழ்நாடு பெயர் உள்ளவரை நான் தான் முதல்வர் என்று சொன்னதைப் போல, மகளிர் உரிமை திட்டம் இருக்கும் வரை ஸ்டாலின்தான் முதல்வர்.
திமுக தலைவராக கருணாநிதி இருந்தபோது, கூட்டணி கட்சிகள் அவர்களாக போனால் போவார்களே தவிர, யாரையும் வெளியேற்ற மாட்டார். அந்த வழியில்தான் நானும் கூட்டணியை பாதுகாத்தேன். ஆனால், திமுகவில் இனி கூட்டணியே வேண்டாம் என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், அதையும் பரிசீலிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
அதிகப்பிரசங்கித்தனம்: முன்னதாக திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா பேசும்போது, “ஒரு கம்யூனிஸ்ட் தலைவர், திமுக கூட்டணியே இல்லை என்கிறார். அதைச் சொல்ல நீங்கள் யார்? எங்கள் கட்சி திமுக கூட்டணியில் இல்லை என்று வேண்டுமானால் சொல்லுங்கள். திமுக கூட்டணியே இல்லை என்று சொல்வது அதிகப்பிரசங்கித்தனம். இதற்கு இந்த மேடையில் உள்ள முத்தரசன் மன்னிக்க வேண்டும். இன்னொருவர் பொதுக்குழுவை கூட்டி ஆலோசிக்கிறோம் என்கிறார். அவரது மொத்த கட்சியையே கலைஞர் அரங்கத்துக்குள்ளேயே கூட்டி விடலாம். அவரெல்லாம் பேசுகிறார். எனவே, தயவு செய்து திமுக தலைவர் இனிமேல் கூட்டணியே இல்லை என அறிவிக்க வேண்டும்” என்றார்.
இக்கரைக்கு அக்கரை பச்சை: முத்தரசன் ‘பஞ்ச்’ பேச்சு
விழாவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் இரா.முத்தரசன் பேசியதாவது: இக்கரைக்கு அக்கரை பச்சை என்று சொல்லுவார்கள். அதாவது, ஆற்றுப் படுகைகளில் ஆடு, மாடுகள் மேயும். அப்போது இந்தக் கரையில் இருந்து அந்தக் கரையை பார்க்கும்போது பசுமையாக தெரியும். இதனால், முதலில் ஒரு ஆடு செல்லும், அதைத் தொடர்ந்து மற்றொரு ஆடு, பின்னர் ஒரு மந்தையே அந்தப் பக்கம் சென்று விடும்.
ஆனால், அங்கே போனால் நிலைமை இதைவிட மோசமாக இருக்கும். எங்கேயாவது மட்டும் கொஞ்சம் பச்சை தெரியும், அங்கு ஒன்றுமே இருக்காது. வந்து விட்டோம், உடனே திரும்பிவிட்டால், அந்தப் பகுதி நம்மை ஏற்றுக்கொள்ளுமா? ஏற்றுக் கொள்ளாதா? என தெரியாது. 2 நாட்கள் இருந்துவிட்டாவது சென்று விடுவோம் என்று நினைக்கும். இப்படியான ஒரு சூழல் உள்ளது. இது யாரை குறிப்பிட்டும் நான் சொல்லவில்லை என்றார்.