

| படம்: எல்.சீனிவாசன் |
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை ஒட்டி, அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தமிழக அரசின் சார்பில் பள்ளிக்கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ் மோகன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
முதல்வர் விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில், ``முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளில், தமிழ் மொழி, இலக்கியம், திரைத்துறை, அரசியல், ஆட்சி நிர்வாகம் மற்றும் மாநில உரிமைகள் போன்றவற்றில் அவரது பங்களிப்பை நினைவுகூருகிறேன். அவரது பிறந்த நாளில் எனது மரியாதை கலந்த வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்'' என்று பதிவிட்டிருந்தார்.
மெரினா கடற்கரையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அவருடன் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி, பொன்முடி, ஆ.ராசா எம்பி உள்ளிட்டோரும், தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகையும் மரியாதை செலுத்தினர்.
அதைத் தொடர்ந்து ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்திலும், கோடம்பாக்கம் முரசொலி அலுவலகத்திலும், தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்திலும் உள்ள கருணாநிதி சிலைகளுக்கு மரியாதை செலுத்திய மு.க.ஸ்டாலின், திமுக இளைஞரணி தலைமையகமான அன்பகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள 75 அடி உயர கொடிக் கம்பத்தில் திமுக கொடியை ஏற்றிவைத்து, அங்கு புதுப்பிக்கப்பட்ட அலுவலகத்தையும், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரது மார்பளவு சிலைகளையும் திறந்து வைத்தார்.
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்ட செய்திகளில் கூறியிருப்பதாவது:
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தமிழ் மக்களின் கண்ணியத்துக்காவும், சமூக நீதிக்காகவும், விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: வெற்றியை தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் ஏற்றாமல் சோதனை கடல்களை சோர்வின்றி நீந்திக் கடந்த கருணாநிதியின் ஆற்றல் என்னிடமும் ஒவ்வொரு தொண்டரிமும் இருக்கிறது. உறுதியாய் சொல்கிறேன், மீண்டும் வெற்றி சரிதத்தை எழுதுவோம்.
பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்: பெரியாரின் வழியில் சுயமரியாதை போராளியாய், அண்ணா வழியில் மொழியுரிமை, மாநில உரிமைகள் காத்த தமிழின தலைவராய் வாழ்ந்த கருணாநிதியின் புகழைப் போற்றுவோம்.
விசிக தலைவர் திருமாவளவன், மநீம தலைவர் கமல் ஹாசன், திக தலைவர் கி.வீரமணி, சு.திருநாவுக்கரசர் உள்ளிட்டோரும் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டியுள்ளனர்.