

சென்னை: 2029-ம் ஆண்டு தேசிய விளையாட்டு போட்டிகளை தமிழகத்தில் நடத்த வாய்ப்பளிக்க வேண்டும் என்று மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட வியாவிடம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக அரசின் பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா நேற்று டெல்லியில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்தார்.
அப்போது, தமிழகத்தை இந்தியாவின் முன்னணி விளையாட்டு மாநிலமாக உயர்த்தும் நோக்கில் பல்வேறு முக்கிய முன்மொழிவு திட்டங்களை முன்வைத்தார். சர்வதேச மற்றும் தேசிய போட்டிகளை வெற்றிகரமாக நடத்திய அனுபவத்தின் அடிப்படையில், 2029-ம் ஆண்டு தேசிய விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த வாய்ப்பளிக்க வேண்டும்.
இதனால், தமிழகத்தின் நீடித்த உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு வலுவான அடித்தளமாக இது அமையும் என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். மேலும், திருச்சி மாவட்டத்தில் 48 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள ‘திருச்சி ஒலிம்பிக் அகாடமி’ வளாகத்தில், தற்காப்பு கலைகளுக்கான தேசிய முதன்மை நிலை மையம் அமைப்பதன் மூலம் விளையாட்டு மேம்பாட்டை மேலும் வலுப்படுத்த முடியும்.
ஒலிம்பிக் விளையாட்டான ‘ஏறு விளையாட்டு’ பயிற்சிக்காக, தற்போதைய விளையாட்டு சூழல் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளைக் கணக்கில் கொண்டு, சென்னையில் சர்வதேச தரத்திலான ஏறு விளையாட்டு பயிற்சி மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டிலேயே அதிக இளைஞர்களையும், வலுவான விளையாட்டு கலாச்சாரத்தையும் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்வதால், தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 2 விளையாட்டு பிரிவுகளுக்கு முன்னுரிமை வழங்கி கூடுதலாக ‘கேலோ இந்தியா மையங்கள்’ மற்றும் ‘கேலோ இந்தியா மாவட்ட மையங்களை’ விரிவாக்கம் செய்ய இந்த ஆலோசனையின் போது வலியுறுத்தப்பட்டது.
தேசிய ஊக்க மருந்து தடுப்பு கழகத்துடன் இணைந்து, ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்கான ஒரு தேசிய மையமாக செயல்படும் வகையில், தேசிய ஊக்க மருந்து தடுப்பு கல்வி மற்றும் விழிப்புணர்வு மையம் சென்னையில் அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் ஏற்கெனவே அமைந்துள்ள ஒலிம்பிக் அகாடமி மற்றும் உயர் செயல்திறன் மையங்களின் கட்டமைப்பை அடிப்படையாக கொண்டு, இந்தியா முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு ஒருங்கிணைந்த சேவைகளை வழங்கும் நோக்கில், தேசிய விளையாட்டு மையம், விளையாட்டு மருத்துவம், காயம் மீட்பு மற்றும் செயல்திறன் மேம்பாட்டு மையத்தை மதுரையில் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனு இந்த சந்திப்பின் போது வழங்கப்பட்டது.
அப்போது, விளையாட்டை ஊக்குவிக்கும் தமிழக அரசின் முயற்சிகளை பாராட்டி, தனது முழுமையான ஆதரவும் ஒத்துழைப்பையும் வழங்குவதாக மன்சுக் மாண்டவியா உறுதியளித்தார். இந்த சந்திப்பின்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு செயலாளர் சஜ்ஜன்சிங் ரா.சவான், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர்.