

சென்னை: தவெக என்கிற அரசியல் கட்சி, அரசியல் பிணி மட்டுமல்ல; அது ஒரு சமூகப் பிணி என்றும் தவெகவின் 6 மாதகால ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழகம் பின்னோக்கிச் செல்வதாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் பெரியாரின் ‘குடி அரசு’ இதழின் முழுத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது: இத்தனை ஆண்டுகாலம் நாம் கடினமாக உழைத்து உருவாக்கிய வளர்ச்சி, 6 மாதங்களில் பின்னோக்கிச் சென்றுவிட்டது. பெரியாரை கொள்கைத் தலைவர் என்று தவெக கூறினாலும், அவரது எந்தக் கொள்கை குறித்தும் எந்தக் கூட்டங்களிலும் பேசுவதில்லை.
இந்த ஆட்சிக்கு வழிகாட்டியாகவும், கொள்கைத் தலைவராகவும் ஒரு ஜோதிடர்தான் இருக்கிறார். மூடநம்பிக்கையில் மூழ்கிப்போனவர்கள் கவர்ச்சிக்காகப் பெரியாரைக் கொள்கைத் தலைவர் என்கிறார்கள்.
ஒரு விஷயத்தில்கூட அவர்களால் உறுதியாக நிற்க முடியவில்லை. முதலில் அறிவிக்கிறாகள். பின்னர் அவர்களே அதை ரத்து செய்கிறார்கள். எதிலும் வெளிப்படைத்தன்மை இல்லை. இவர்களால் அண்டை மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நம்மைக் காமெடியனாகப் பார்க்கிறார்கள்.
முன்பு அரிவாள் வெட்டுக்கும் மின்வெட்டுக்கும் இடையேதான் போட்டி எனக் கூறினேன். தற்போது போதைப் பொருளுக்கும் வன்கொடுமைக்கும் இடையில்தான் போட்டி என்ற நிலை மாறியிருக்கிறது.
மேலும் அதிகாரிகளுக்குத் தொல்லை கொடுப்பதில் அமைச்சர்களுக்கும், எம்எல்ஏக்களுக்கும் இடையிலான போட்டியும் நிலவுகிறது. பட்டப்பகலில் இரட்டைக் கொலை நடக்கிறது. ஆளுங்கட்சியினரே பாலியல் வன் கொடுமையில் ஈடுபடுவதால், பெண்கள் வெளியில் நடமாடுவதற்கே அச்சம் கொள்கிறார்கள்.
அதிக அளவிலான போதைப்பொருள் கடத்தல் பிடிபடுவது தமிழகத்தில்தான் நடக்கிறது. இதைக்கூட தமிழக போலீஸார் பிடிப்பதில்லை. மத்திய போதை தடுப்பு பிரிவே பிடிக்கிறது.
மேலும் வெங்காயம், தக்காளி, அரிசி விலையைக் கேட்டாலே மயக்கம் வருகிறது. தமிழக உரிமையைக் கர்நாடக முதல்வர் காலில் மிதிக்கிறார். எதற்கும் முதல்வர் வாயை திறக்கவில்லை.
மொத்தத்தில், 6 மாத தவெக ஆட்சியில் அத்தனையும் நாசம். தவெக என்கிற அரசியல்கட்சி, அரசியல் பிணி மட்டுமல்ல, அது ஒரு சமூகப் பிணி. அதை எதிர்த்து போராட வேண்டும். இவ்வாறு பேசினார்.