

சென்னை: திமுக - மக்கள் நீதி மய்யம் கட்சிகளுக்கு இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில், நாளை மநீம தலைவர் கமல்ஹாசன் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள், மண்டல அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகக் குழு, செயற்குழு அவசரக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மநீம பொதுச் செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்து கலந்தாலோசிக்க, மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், அணிகளின் மண்டல அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்களின் அவசரக் கூட்டம், தலைவர் கமல் ஹாசன் தலைமையில் நாளை 20.03.2026 (வெள்ளிக்கிழமை), மாலை 5 மணிக்கு நடைபெற இருக்கிறது.
சென்னை அண்ணாநகர் சாம்கோ ஹோட்டலில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அனைத்து மாவட்டச் செயலாளர்கள், அணிகளின் மண்டல அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.
சிக்கல் என்ன?
முன்னதாக இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த திமுகவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அருணாச்சலம், “தொகுதி உடன்பாடு தொடர்பாக இன்று திமுகவுடன் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்றது. தொகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பது தொடர்பாக அவர்களது தரப்பில் இருந்து தகவல் பரிமாறப்பட்டது.
மேலும் தேர்தலில் போட்டியிடும் சின்னம் குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொகுதிகளைப் பொறுத்தவரை சுமுகமான பேச்சு வார்த்தை நடைபெறும் பட்சத்தில், சின்னத்தை பொறுத்தவரை திமுக சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
கடந்த தேர்தல்களில் சுமார் 4 சதவீதம் வாக்குகள் மநீம சின்னமான பேட்டரி டார்ச் மூலம் நாங்கள் பெற்றுள்ளோம். மக்களிடம் சென்று சேர்ந்த சின்னம் பேட்டரி டார்ச். எனவே, எங்களது தனி சின்னமான டார்ச் லைட் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்பதை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். இது குறித்து கமல்ஹாசன் பார்வைக்கு கொண்டு செல்ல உள்ளோம், அவரின் முடிவு தான் இறுதியானது. அவர் சொல்வதை ஏற்க தயாராக உள்ளோம்.
தொகுதி எண்ணிக்கைக்கான பேச்சுவார்த்தை சுமுகமாக சென்று கொண்டிருக்கிறது. ஆனால், எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது தொடர்பாகத்தான் பேச்சுவார்த்தை நீடித்து வருகிறது. மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெறும். இன்னும் ஓரிரு நாட்களில் தொகுதிப் பங்கீட்டில் முடிவு எட்டப்படும்” என்றார்.