

திருநெல்வேலி: முதல்வர் நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு பணிக்கு சென்று திரும்பியபோது, வேனில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக காவல் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மேலப்பாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக (எஸ்எஸ்ஐ) குமார் (49) என்பவர் பணியாற்றி வருகிறார். ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கடந்த 3-ம் தேதி முதல்வர் விஜய் பங்கேற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பாதுகாப்பு பணிக்காக, திருநெல்வேலி மாநகரத்திலிருந்து குமார் தலைமையில் ஆண் மற்றும் பெண் போலீஸார் சென்றிருந்தனர்.
பணி முடிந்து இரவில் போலீஸ் வேனில் அவர்கள் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது உதவி ஆய்வாளர் குமார் அமர்ந்திருந்த இருக்கைக்கு முன்புற இருக்கையில் பெண் காவலர் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தார். அந்த பெண் காவலருக்கு குமார் பாலியல் தொல்லை அளித்ததாக தெரிகிறது.
அதிர்ச்சி அடைந்த பெண் காவலர், திருநெல்வேலிக்கு வந்து சேர்ந்ததும், மாநகர காவல் ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சயிடம் நடந்த சம்பவங்களை கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
மாநகர காவல் ஆணையரின் அறிவுறுத்தலின்பேரில் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த பெண் காவலர் புகார் அளித்தார். அதன்பேரில் பாலியல் சீண்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்து உதவி ஆய்வாளர் குமாரை கைது செய்தனர். இச்சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.