

தூத்துக்குடி: தேனியில் சிறையிலிருந்து கைதிகள் தப்பிய பிரச்சினை எதிரொலியாக, ஆங்கிலேயர் காலந்தொட்டு செயல்பட்டு வந்த ஸ்ரீவைகுண்டம் கிளைச்சிறை திடீரென மூடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பழைய வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் வழக்குகளுக்காக ஆஜர்படுத்தப்படுபவர்கள் இரவு நேரங்களில் அடைத்து வைக்கப்பட்டு வந்தனர். இங்கு 25-க்கும் மேற்பட்ட கைதிகள் இருந்தனர். தற்போது ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறையை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அங்கு அடைக்கப்பட்டிருந்த கைதிகள் அனைவரும் நேற்று முன்தினம் இரவோடு இரவாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தூத்துக்குடி பேரூரணியில் உள்ள மாவட்ட சிறைக்கு மாற்றப்பட்டனர். தற்போது ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறை பூட்டப்பட்ட நிலையில் உள்ளது. கிளைச் சிறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளதாக கூறப்படும் நிலையில், இது பழங்கால கட்டிடம் என்பதால் நிரந்தரமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து சிறைத்துறை நிர்வாகம் தெளிவுபடுத்தவில்லை. ஆங்கிலேயர் காலம்முதல் செயல்பட்டு வந்த ஸ்ரீவைகுண்டம் கிளைச்சிறை தற்போது காட்சிப் பொருளாக மாறியுள்ளது.