

தூத்துக்குடி: கடல் ஆம்புலன்ஸ் திட்டத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் செயல்படுத்துவதற்கான பணிகளை செய்து வருகிறோம் என, அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்தார்.
தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத், தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: மீனவர்களுக்கும், அவர்களின் குடும்பத்துக்கும் உறுதுணையாக இருக்கும் வகையில், சில திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்து, கடந்த 4 நாட்களுக்கு முன்பு முதல்வர் என்னிடம் கலந்துரையாடினார்.
அதில் முக்கியமானது கடல் ஆம்புலன்ஸ் திட்டம். வரும் 2027-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இத்திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் பணிகளைச் செய்து வருகிறோம். தூத்துக்குடி அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியாகும் சாம்பல் கழிவுகள் கடற்பகுதியில் திட்டுக்களாக அமைந்திருக்கிறது. சாம்பல் திட்டுக்களை அகற்றுவது தொடர்பாக தொழில்நுட்பக் குழுவுடன் ஆலோசனை செய்து வருகிறோம்.
காசிமேட்டில் சில தீய சக்திகளின் தூண்டுதலின் பேரில், மீனவர்கள் சின்னச் சின்ன போராட்டங்களை நடத்துகிறார்கள். முதல்வர், ஆந்திர மாநில அரசுடன் தொடர்ந்து பேசி வருகிறார். தமிழக மீனவளத்துறை இயக்குநர் நாளை, ஆந்திர மாநிலத் தலைமைச் செயலாளரை சந்தித்து பேச இருக்கிறார். காசிமேடு மீனவர்களின் படகுகள் விரைவில் விடுவிக்கப்படும். யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம். தீய சக்திகளின் தந்திரங்கள் செல்லுபடியாகாது. இவ்வாறு அவர் கூறினார்.