

சென்னை: இலங்கை தமிழர்களின் உரிமைகளுக்காக தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரண்டு குரல்கொடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து இலங்கை எம்.பி. கஜேந்திரகுமார் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை தமிழர்கள் எதிர் கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக தமிழ்த்தேசியப்பேரவையின் தலைவரும், இலங்கை எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை நேற்று முன்தினம் சந்தித்தனர். அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட்,மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள்,நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை நேற்று சந்தித்தனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் எம்பி கஜேந்திரகுமார் கூறியதாவது: இலங்கையில் தற்போது அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசு புதிய அரசியலமைப்பை உருவாக்கி, அதன்மூலம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் எனக்கூறி வருகிறது. ஒற்றையாட்சி முறைமையை வைத்துக்கொண்டு இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. ஒற்றையாட்சி முறைமையை பயன்படுத்தி தமிழ் மக்களின் தாயக பகுதிகள் திட்டமிட்டு சிங்களமயமாக்கப்பட்டு வருகின்றன. சைவ கோயில்கள் இடிக்கப்பட்டு, பவுத்த கோயில்கள் கட்டப்படுகின்றன. இது இன அழிப்பாகும்.
இத்தருணத்தில் இலங்கை தமிழர்களின் உரிமைகளுக்காக தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரண்டு குரல்கொடுக்க வேண்டும். தமிழகத்தின் குரல் தான் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து,அதன்மூலம் இலங்கை அரசுக்கு உரிய நெருக்கடியை ஏற்படுத்தும். இதையொட்டி இலங்கைத் தமிழர் விவகாரங்களை முறையாக கையாள தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற, சட்டப்பேரவை பிரதிநிதித்துவம் கொண்டவர்கள் மற்றும் ஆதரவு இயக்கங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைப்பு குழு ஒன்றை உருவாக்க வேண்டும்.
தமிழக மீனவர்களுக்கும், இலங்கைத் தமிழ் மீனவர்களுக்கும் இடையே புரிந்துணர்வுடன் கூடிய தீர்வை ஏற்படுத்த வேண்டும் என முதல்வரிடமும், மற்ற கட்சித் தலைவர்களிடமும் வலியுறுத்தினோம். மீனவர்கள் பிரச்சினையைத் தீர்க்க தமிழக மீனவர்கள், இலங்கை மீனவர்கள் இணைந்த ஒரு மாநாட்டை நடத்த நடவடிக்கை மேற்கொள்ள தயாராக இருப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார். இத்துடன் தமிழக முகாம்களில் வாழும் இலங்கை அகதிகளின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.