

புதுக்கோட்டை: எல்லை தாண்டி வந்து மீன்பிடித்தால் விபரீதத்தைச் சந்திப்பீர்கள் என்ற எச்சரிக்கையுடன் சமூக வலைதளங்களில் பரவி வரும் இலங்கை மீனவரின் மிரட்டல் ஆடியோ, தமிழக மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச எல்லையைத் தாண்டி இலங்கை எல்லைக்குள் இரவில் வந்த தமிழக மீனவர்கள், இலங்கை மீனவர்களுக்குச் சொந்தமான ரூ.15 லட்சம் மதிப்புள்ள வலை உள்ளிட்ட பொருட்களை துண்டு துண்டாக வெட்டிவிட்டதாகவும், இதைக் கண்டித்ததால் அவர்கள் தங்களது படகின் மின் விளக்குகளை அணைத்து விட்டு தப்பிச் சென்றதாகவும் இலங்கை மீனவர் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் நேற்று வைரலானது.
மேலும், அந்த ஆடியோவில் பேசியிருப்பதாவது: இதை பார்த்துக்கொண்டு நாங்கள் அமைதியாக இருக்க முடியாது. யாழ்ப்பாணம், தலைமன்னார் உள்ளிட்ட மீன்பிடி இறங்குதளங்களில் இருந்து இரட்டை இன்ஜின்களைப் பொருத்தி, வெடிமருந்துகளுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகளுடன் மீனவர்கள் தயார் நிலையில் இருக்கிறோம். எல்லை தாண்டி வந்தால் இங்கிருந்து ஒரு படகு கூட திரும்பாது. தாக்குதல் நடத்தினால் மீனவர்கள் கடலில் செத்து மடியும் நிலை ஏற்படும்.
உங்கள் செயலை உடனே நிறுத்தப் பாருங்கள். இல்லையென்றால், ஈரானில் அமெரிக்கர்கள் நடத்தும் தாக்குதலைப் போன்ற நிலை ஏற்படும். ஏற்கெனவே தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளோம். அதையும் மீறி இது நடந்துள்ளது. இதன்பிறகும் எல்லை தாண்டி வந்தால், இங்கு நாங்கள் துடிப்பதைப் போல, அங்குள்ள மக்களும் துடிப்பார்கள். அதை நாங்கள் விரும்பவில்லை. அப்படிச் செய்ய வைத்துவிடாதீர்கள். இதை எச்சரிக்கையாக தெரிவிக்கிறேன். இவ்வாறு அந்த மீனவர் பேசியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, “மீனவர்கள் விசைப்படகுகளில் பாதுகாப்பாகச் சென்று தொழில் செய்ய வேண்டும்” என்று கோட்டைப்பட்டினம் மீனவர் சங்கம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுக்கோட்டை மீன்வளத் துறை உதவி இயக்குநர் அலுவலக அலுவலர்கள் கூறும்போது, “புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் யாரும் சர்வதேச எல்லையைத் தாண்டிச் செல்லவோ, இலங்கை கடல் பகுதிக்குள் நுழையவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை மீறிச் செல்லும் மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றனர்.
இலங்கை மீனவர்கள் சார்பில் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.