

கோப்புப் படம்
நாகப்பட்டினம்: கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி, மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் வீசினர்.
நாகை மாவட்டம் வானவன் மகாதேவியை சேர்ந்த காளிமுத்து மகன் செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவருடன், கதிர்வேல், ராஜி, முருகபாண்டி ஆகிய மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
நேற்று முன்தினம் இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை தாங்கள் வைத்திருந்த கம்பால் தாக்கியதுடன் மீனவர்களின் வலைகளை வெட்டி கடலில் வீசி எறிந்தனர்.இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் நேற்று கரை வந்து சேர்ந்தனர்.
பின்னர் அவர்கள் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.