

திருச்சி: தமிழகத்தை முன்னேற்றப் பாதைக்கு தவெக அரசு கொண்டு செல்லும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி. பாராட்டு தெரிவித்தார்.
திருச்சி விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: தமிழகத்தில் பதவியேற்றுள்ள புதிய அரசு, மாநிலத்தை அடுத்தகட்ட முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் செல்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
தமிழக - இலங்கை மீனவர்கள் பிரச்சினை என்பது இரு தரப்பிலும் மனிதாபிமான ரீதியாக அணுகப்பட வேண்டிய ஒரு விஷயம். சட்ட மீறல்கள் என்ற விவகாரத்தையும் தாண்டி, மக்களின் வாழ்வாதாரத்தை இதில் கவனத்தில் கொள்ள வேண்டும். இருதரப்பிலும் விட்டுக்கொடுத்து சுமுக முடிவு காணப்பட வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசும், மத்திய அரசும், இலங்கை அரசு மற்றும் யாழ்குடா நாட்டு மீனவர் சமூகத்துடன் இணைந்து பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டும்.
வேண்டுகோள்... ஏற்கெனவே இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சுமைகள், இலங்கை அரசுக்கு மிக சவாலான காரியமாக உருவெடுத்துள்ளது. எனவே, தமிழகம் உள்ளிட்ட தென்பிராந்திய மாநிலங்களில் உள்ள முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.