

சென்னை: தமிழ் மின் நூலகத்தில் ஜி.டி.நாயுடுவின் சிறப்பு இணைய பக்கத்தை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தொடங்கி வைத்தார். அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு அரிய நூல்கள் அடங்கிய பெரிய நூலகம் ஒன்றை பராமரித்து வந்தார்.
அப்போது அவருடைய தொகுப்பிலிருந்து 30 ஆயிரம் புத்தங்களை அந்நாளில் கோவை நகரமன்றத்துக்கு அன்பளிப்பாக வழங்கினார். மேலும் பொதுவிழாக்களில் கலந்துகொண்டபோது தனது உரையை சிறுநூலாக அச்சடித்து அவையினருக்கு கொடுப்பது அவரது வழக்கம்.
அப்படியான அவரது எழுத்துகளையும், சிந்தனைகளையும் தாங்கிய கட்டுரைகள், வாழ்க்கை வரலாறுகள், அவர் சேகரித்த நூல்கள், இதழ்கள், புகைப்படங்கள் ஏராளமாக உள்ளன.
இந்நிலையில் அவரது ஆவணங்கள் மின்பதிப்பாக்கம் செய்யப்பட்டு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ் இணைய கல்விக்கழகத்தின் மின் நூலகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, ‘தமிழ்நாட்டு அறிவியலாளர் ஜி.டி.நாயுடு’ என்ற பெயரில் சிறப்பு இணைய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
https://tamildigitallibrary.in/gdn என்ற இந்த இணைய பக்கத்தை, ஜி.டி.நாயுடுவின் நினைவு நாளான நேற்று, தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசும்போது, “ஜி.டி.நாயுடுவின் அறிவை சமுதாயம் முழு அளவில் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றாலும், எதிர்காலத்தில் நம்முடைய சந்ததியருக்கு அவருடைய கண்டுபிடிப்பும் அறிவும் பெரும் கருவூலங்களாக அமையும் என்று அண்ணா கூறியதை, தமிழக அரசு அவருடைய சிந்தனைகளை கருவூலமாக்கி ஓர் அரிய காலப்பேழையை வெளியிட்டு நனவாக்கியுள்ளது.
இந்தச் சிறப்பு இணைய பக்கம் தமிழ்கூறும் நல்லுலகுக்கு மேலும் ஒரு நல்வரவு” என்று தெரிவித்தார். நிகழ்வில் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் பொறுப்பு இயக்குநர் கோமகன், உதவி இயக்குநர் செல்வ புவியரசன், திட்ட அலுவலர் சித்தானை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஜி.டி.நாயுடு அறக்கட்டளை தலைவர் கோபால், அறங்காவலர்கள் ராஜ்குமார், அகிலா, ஜி.டி.அருங்காட்சியகத்தின் பொதுமேலாளர் சுரேஷ், புகைப்பட ஆவணக்காப்பகம் தலைவர் ரமேஷ்குமார் ஆகியோர் காணொலி வாயிலாகப் பங்கேற்றனர்.