சென்னை: பொங்கலுக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என பயணிகள் ஆலோசனைக் குழு வலியுறுத்தி உள்ளது.
அடுத்த ஆண்டு ஜன.14-ம் தேதி போகிப்பண்டிகை, 15-ம் தேதி பொங்கல், 16-ம் தேதி மாட்டுப்பொங்கல், 17-ம் தேதி காணும் பொங்கல் வருகிறது.
இதையொட்டி சென்னை உட்பட பெருநகரங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் சொந்த ஊருக்குச் செல்வார்கள்.
ரயில்வேயில் 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருக்கிறது. அந்த வகையில், பொங்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு, கடந்த மாதம் 2-வது வாரத்திலேயே முடிந்து விட்டது.
இதற்கிடையே, பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு எப்போது வெளியாகும் என பயணிகள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், பொங்கல் பண்டிகையை ஒட்டி, கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே பயனாளர் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜாபர் அலி கூறியதாவது: தமிழக மக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று பொங்கல் பண்டிகை.
வழக்கமாக இயக்கப்படும் விரைவு ரயில்களில் டிக்கெட் விற்று தீர்ந்துவிட்ட நிலையில், சிறப்பு ரயில்களுக்காக பயணிகள் காத்திருக்கின்றனர். சென்னை உள்ளிட்ட நகரங்களில் வசிப்போர் சொந்த ஊருக்குச் செல்ல போதிய அளவில் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும்.
குறிப்பாக, தென்மாவட்டங்களுக்கு கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் அதேபோல், முன்பதிவு இல்லாத ரயில்களையும் கூடுதலாக இயக்க வேண்டும் என தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.