

சென்னை: சென்னையில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள 50 கிலோ போதைப்பொருள் தயாரிப்புக்கான மூலப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தந்தை, மகன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை எம்கேபி நகர், அன்னை இந்திரா நகரில் பிரபல பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு போதைப் பொருள் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் சூடோபெட்ரின் வேதிப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகப் போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் கடந்த 12-ம் தேதி அங்கு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது 2 சாக்கு மூட்டைகளில் தலா சுமார் 25 கிலோ வீதம் மொத்தம் 50 கிலோ சூடோபெட்ரின் வேதிப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய சென்னையைச் சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். அவர்களில் தந்தை, மகன் ஆகியோரும் அடங்குவர்.
பறிமுதல் செய்யப்பட்ட வேதிப்பொருளின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.1 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி சுமார் 50 கிலோ போதைப் பொருளை தயாரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதற்கட்ட விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட வேதிப்பொருள் ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்குக் கொண்டு வரப்பட்டது தெரிய வந்துள்ளது.
மேலும், இந்த வேதிப்பொருளை சட்டவிரோதமாக போதைப்பொருள் தயாரிப்பதற்காக வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.
சென்னையை மையமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள், எபிட்ரின் மற்றும் சூடோபெட்ரின் போன்ற வேதிப்பொருட்களை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடு களுக்குக் கடத்தி வருவதும் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் இந்த கடத்தல் சம்பவத்தில் உள்ள தொடர்பு, வேதிப்பொருளின் உண்மையான மூல இடம், கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்த வெளிநாடு மற்றும் இதன் பின்னணியில் செயல்படும் உள்நாட்டு, சர்வதேச கடத்தல் கும்பல்கள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை ஒழிப்பதற்கும், போதைப்பொருள் தயாரிப்புக்கான மூல வேதிப்பொருட்கள் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல்களைப் பொதுமக்கள் 1933 என்ற தேசிய போதைப்பொருள் தடுப்பு உதவி எண்ணில் தெரிவிக்கலாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.