9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு
Updated on: 
2 min read

தென்காசி: தமிழகத்தில் 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், தென்காசி, திருநெல்வேலி உட்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்ததால் அவற்றுக்கும் சிறப்பு அதிகாரிகளை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 28 மாவட்டங்களில் கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியக் குழுக்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, ஊரக உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிப்பதற்காக 6 மாத காலத்துக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையைச் சேர்ந்த அதிகாரிகளை சிறப்பு அதிகாரிகளாக நியமித்து தமிழக அரசு ஆணையிட்டது.

அதன்படி, கிராம ஊராட்சிகளின் சிறப்பு அதிகாரிகளாக அந்தந்த ஒன்றியங்களின் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி ஒன்றியங்களுக்கான சிறப்பு அதிகாரிகளாக அந்தந்த மாவட்டங்களின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையைச் சேர்ந்த உதவி இயக்குநர்கள், மாவட்ட ஊராட்சிகளுக்கான சிறப்பு அதிகாரிகளாக அந்தந்த மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வடதல் இயக்குநர், கூடுதல் ஆட்சியர், இணை இயக்குநர், திட்ட இயக்குநர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இந்த 28 மாவட்டங்களிலும் சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலம் முடிவடைந்த ஒவ்வொரு 6 மாத காலத்துக்கு பின்னரும் அடுத்தடுத்து பதவிக்காலத்தை நீட்டித்து தமிழக அரசு ஊத்தரவிட்டு வந்தது. இந்நிலையில், 28 மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியக் குழுக்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளில் சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலம் அக்.19ம் தேதி (நேற்று) முடிவடைந்தது. இதையடுத்து, இந்த 28 மாவட்டங்களில் சிறப்பு அதிகாரிகளின் பதவிக் காலத்தை 2027-ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக் காலமும் அக்.19-ம் தேதி அன்று (நேற்று) முடிவடைந்தது. இதையடுத்து, இந்த 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிப்பதற்காக 6 மாத காலத்துக்கு (2027-ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி வரை) நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில், புதிதாக உருவாக்கப்பட்ட 9 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 93 கிராம ஊராட்சிகள் இதில் அடங்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தந்த வட்டாரங்களின் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அந்தந்த கிராம ஊராட்சிகளுக்கான சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்படுகிறார்கள். அந்தந்த மாவட்டங்களின் ஊராட்சி ஒன்றியங்களுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் உதவி இயக்குநர் (ஊராட்சிகள் மற்றும் தணிக்கை) சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்படுகிறார்கள். அந்தந்த மாவட்டங்களின் மாவட்ட ஊராட்சிகளுக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைகளின் கூடுதல் இயக்குநர், கூடுதல் ஆட்சியர், இணை இயக்குநர், திட்ட இயக்குநர் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்படுகிறார்கள் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு
மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலில் பூதத்தாழ்வார் திருத்தேர் உற்சவம் கோலாகலம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in