

சென்னை: தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ‘சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி’ (எஸ்ஐஆர்) நடைமுறையின் கீழ், வாக்காளர் பட்டியலில் இதுவரை பெயர் இடம்பெறாத விடுபட்ட வாக்காளர்கள் மற்றும் முதல்முறையாக தகுதிபெறும் இளம் வாக்காளர்களைப் பதிவு செய்வதற்கு சிறப்பு முகாம்களை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, அனைத்து மாவட்ட அதிகாரிகளுடனும் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. இதன்முடிவில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் விடுபட்டவர்கள் மற்றும் தகுதிவாய்ந்த இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்காக அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.