

கோப்புப் படம்
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 34,087 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஜன.9 முதல் 14-ம் தேதி வரை, சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் 10,245 சிறப்புப் பேருந்துகள் என 6 நாட்களுக்கும் சேர்த்து 22,797 பேருந்துகளும் பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட நாட்களுக்கு 11,290 பேருந்துகள் என மொத்தம் 34,087 பேருந்துகள் இயக்கப்படும்.
அதேபோல், பொங்கல் முடிந்த பிறகு, பிற ஊர்களிலிருந்து சென்னை வரும் பயணிகளுக்காக ஜன.16 முதல் 19-ம் தேதி வரை, தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் 6,820 சிறப்புப் பேருந்துகள் சேர்த்து 15,188 பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 9,820 என மொத்தம் 25,008 பேருந்துகளும் இயக்கப்படும்.
சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும். பேருந்து நிலையங்களுக்கு செல்ல இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரம் இயக்கப்படும்.
மொத்தம் 11 முன்பதிவு மையங்கள் ஜன.9 முதல் 14 வரை செயல்படும். மேலும் டிஎன்எஸ்டிசி செயலி மற்றும் www.tnstc.in போன்ற இணையதளங்கள், வாட்ஸ்அப் எண் 9444018898 மூலமும் முன்பதிவு செய்யலாம். பேருந்துகளின் இயக்கம் குறித்து புகார் தெரிவிக்க, 94450 14436 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டண புகார்களுக்கு 1800 425 6151, 044-2474 9002, 044-26280445, 044-26281611 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.