

சென்னை: சட்டப்பேரவையில் பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: புதிய உறுப்பினர்கள் தங்கள் தொகுதி பிரச்னைகளை சட்டப்பேரவையில் எடுத்துரைக்க வேண்டும் என்பதற்காக முதல் கூட்டத்தொடரில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.
ஆனால், தற்போது நடைபெற்று வரும் விவாதங்களில் குறுக்கீடுகள் அதிகரித்து வருகிறது. உறுப்பினர்கள் குற்றச்சாட்டுகள் மற்றும் அவதூறுகளைத் தவிர்த்து, அவையின் நேரத்தை முறையாகப் பயன்படுத்த வேண்டும்.
எனவே நேரததை முறைப்படுத்தும் நோக்கில் ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் உறுப்பினர்கள் பேசுவதற்கு 7 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
‘சூரியனை தொட முடியாது’
சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் மீதான பதிலுரையில் அமைச்சர் வினோத் பேசும்போது, “கடைசியாக சூரியனால் அனைவருக்கும் வியர்த்தது. நீங்கள் (முதல்வர் விஜய்) வந்த பின்னர் சூரியனுக்கே வியர்த்தது என்று திமுகவை மறைமுகமாக விமர்சித்தார்.
இதற்கு திமுக எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்து பேசுகையில், “இதுவரை யாருமே நெருங்கமுடியாத நிலையில்தான் சூரியன் இருக்கிறது. எத்தனையோ விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தும் சூரியனை நோக்கி ராக்கெட் செலுத்த முடியவில்லை”என்றார்.
பேராசிரியர் காலிப் பணியிடம்
அதிமுக எம்எல்ஏ ஒ.எஸ். மணியன் பேசும்போது, “நம்நாட்டில் வடகிழக்கு மாநிலங்களில் 100 சதவீதம் இயற்கை விவசாயத்தை உருவாக்கியுள்ளனர். ஆனால், நமது மாநிலத்தில் இயற்கை விவசாயம் என்பது பெயரளவில் மட்டுமே இருக்கிறது.
வேளாண் பட்ஜெட்டில் ஏக்கருக்கு ரூ.4,000 ஊக்கத்தொகை வழங்குவோம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு விவசாயிக்கு எத்தனை ஏக்கர் நிலத்துக்கு நீங்கள் ஊக்கத்தொகை வழங்குவீர்கள்?” என்று கேள்வியெழுப்பினார்.
அதைத் தொடர்ந்து அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசும்போது, “வேளாண் பல்கலைக்கழகத்தில் 450-க்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர் பணியிடங்கள் 10 ஆண்டுகளாக காலியாக உள்ளன.
அவற்றை உடனே நிரப்ப வேண்டும். பல்வேறு பேராசிரியர் பணிக்கான பதவி உயர்வையும் விரைந்து வழங்க வேண்டும்” என்றார்
வாகன வசதி வேண்டும்
சட்டப்பேரவையில் விசிக உறுப்பினர் ஜோதிமணி பேசும்போது, “காலணிகூட அணிய முடியாத நிலையில்தான் பல்வேறு எம்எல்ஏ.க்களின் நிதிநிலை உள்ளது.
லஞ்ச லாவண்யம் இல்லாத அரசு அமைய வேண்டுமெனில் நமது உறுப்பினர்களை நலமுடன் வைத்துக்கொள்வது அவசியமாகும்.
எனவே, எம்எல்ஏக்கள் மக்கள் பணி செய்வதற்கு வாகன வசதிகள் ஏற்பாடு செய்து தர வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
இதற்கு பேரவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர் பதிலளித்து பேசுகையில், “எம்எல்ஏ.க்கள், முன்னாள் எம்எல்ஏ.க்கள் தரப்பில் பல்வேறு கோரிக்கைகள் வந்துள்ளன. அவற்றை முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்கிறேன். அவர் உரிய நடவடிக்கை எடுப்பார்” என்றார்.
மாணவர் மரணம்
கோயம்புத்தூரில் கல்லூரி மாணவன் அமுதன் கொலை செய்யப்பட்டது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் எடுத்துக்கொள்ள வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். அதற்கு பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர், “சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 17-ம் தேதி இந்த விவகாரம் குறித்து விவாதிக்கலாம்” என்று தெரிவித்தார்.