

சென்னை: இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 220 கோயில்களுக்குப் பரம்பரை முறைசாரா அறங்காவலர்களை நியமிப்பதற்கான கால அவகாசத்தை ஆக.28-ம் தேதி வரை நீட்டித்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள 220 கோயில்களுக்குப் பரம்பரை முறைவழிசாரா அறங்காவலர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு கடந்த ஜூன் 14-ம் தேதி வெளியிடப்பட்டது.
இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முதலில் ஜூலை 22-ம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், கோயில்களின் நலனைக் கருத்தில் கொண்டு முதற்கட்டமாக இந்த அவகாசம் ஆக.12-ம் தேதி மாலை 5.45 மணி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நேற்றுடன் (ஆக.12) முடிவடைந்த நிலையில், பக்தர்களின் கோரிக்கையை ஏற்று தகுதியுள்ள நபர்கள் கூடுதல் எண்ணிக்கையில் விண்ணப்பிக்க ஏதுவாக, இந்த அவகாசம் தற்போது ஆகஸ்ட் 28-ம் தேதி வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ள பக்தர்கள், இதற்கான விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து வரும் ஆக.28-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் இணையதளத்திலோ அல்லது அந்தந்த கோயில் அமைந்துள்ள மண்டல இணை ஆணையர் அலுவலகத்துக்கு நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.