

சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்
சென்னை: ‘சட்டப்பேரவையில் முதல்வர் வரும்போது எழுந்து நிற்க வேண்டுமா?’ என்ற கேள்வி பெரும் விவாதமாக மாறியது. இதையடுத்து, ‘சட்டப்பேரவையில் முதல்வர் வரும்போது உறுப்பினர்கள் எழுந்து நிற்பது கட்டாயமில்லை. அது அவரவர் விருப்பத்துக்குட்பட்ட உரிமை’ என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் விளக்கம் அளித்துள்ளார்.
சட்டப்பேரவையில் அமைச்சர் ரமேஷ், ‘முதல்வர் விஜய் அவைக்குள் வரும்போது எழுந்து நின்று வணக்கம் தெரிவிக்க வேண்டும் என்ற கண்ணியத்தை எதிர்க்கட்சி தலைவருக்கும் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் கற்றுக் கொடுக்க வேண்டும்’ என்று கூறினார்.
இதையடுத்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், “பேரவைத் தலைவர் வரும்போது கட்சி வித்தியாசமின்றி அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நிற்பது காலம் காலமாக கடைபிடிக்கும் மரபு. முதல்வராக இருப்பவர்கள் நேராக தங்கள் இருக்கைக்கு சென்று வணக்கம் செலுத்திவிட்டு, அமர்வதுதான் மரபு.
ஆனால், முதல்வர் விஜய் அவைக்குள் நடந்து சென்று அங்கும் இங்கும் திரும்பி வணக்கம் செலுத்திவிட்டு, அமர்கிறார். இது புதிய பழக்கமாக உள்ளது. இப்படி, புதிய மரபாக முதல்வர் வரும்போது எழுந்து நிற்க வேண்டுமெனில் எதிர்க்கட்சித் தலைவருக்கும் நிற்க வேண்டுமா?” என கேள்வி எழுப்பினார்.
இதைத் தொடர்ந்து, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறுகையில்,“முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் அவைக்கு வரும்போது உறுப்பினர்கள் எழுந்து நிற்க வேண்டிய கட்டாயம் இல்லை.
இந்த அவையின் கண்ணியமும், மிகச் சிறந்த பாரம்பரியமும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் மரியாதை தெரிவித்துக் கொள்வதுதான். அந்த அடிப்படையில் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் அவைக்கு வரும்போது மரியாதை தெரிவிப்பது தமிழர்களின் பண்பாடு, பாரம்பரியம்.
அந்த கண்ணியத்தை காப்பாற்ற வேண்டுமா வேண்டாமா என்பதை அவர்வர்களின் விருப்பத்துக்கே விட்டுவிடுகிறேன். அதை செய்தாக வேண்டும் என கட்டாயபப்டுத்த முடியாது. அவரவருக்கு கொடுக்கும் மரியாதையை, தங்களின் மனதுக்கு ஏற்ப கொடுப்பது அவரவரின் உரிமை” என்றார்.
தவெக அரசுக்கு புகழாரம்:
முன்னதாக, தவெக அரசு 100 நாட்களை நிறைவு செய்திருப்பது தொடர்பாக பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் பேசும்போது, “மதச்சார்பற்ற, சமூக நீதி காக்கும் முதல்வர் விஜய்யின் பொற்கால அரசு பொறுப்பேற்று 100 நாட்களை கம்பீரமாக நிறைவு செய்துள்ளது. அரசின் இந்த முதல் 100 நாட்கள் என்பது நாட்காட்டியில் கடந்து செல்லும் நாட்கள் அல்ல, தமிழக வரலாற்றில் பொறிக்கப்பட்ட ஒரு வரலாற்று மாற்றம்.
வாக்குறுதி என்பது தேர்தலுக்கான வார்த்தை அல்ல. அது மக்களுக்கான பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்படும் இந்த அரசு, முதல் நாளிலிருந்து மக்களின் நாடித் துடிப்பு அறிந்து, புதிய சிந்தனையுடன் களமிறங்கி முதல் 100 நாட்கள் பல்வேறு துறைகளில் செயல்படுத்திய பணிகள் பாராட்டுக்குரியவை.
ஏழை மக்களின் நலன் காக்கும் வகையிலும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், இளைஞர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் நோக்கிலும் பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு படை, ஒவ்வொரு குடும்பத்துக்கும் 200 யூனிட் வரையிலான இலவச மின்சாரம், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றிருந்த ரூ.6 ஆயிரம் கோடி பயிர்ககடன் தள்ளுபடி, வீடற்றோருக்கான வெற்றி வீடு திட்டம், அண்ணன் சீர் திட்டம், தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு, இது மக்களுக்கான அரசு என்பதை முதல்வர் நிரூபித்துள்ளார்.
இந்த குறுகிய காலத்துக்குள் தமிழகத்தின் மக்களாட்சி மாண்பை காக்கும் வகையிலும், தமிழக மக்களின் நீண்டகால கனவை பூர்த்தி செய்யும் வகையிலும் ஊழலற்ற, நேர்மையான, வெளிப்படையான தன்மையை நிர்வாகத்துக்கு வழங்கி வரும் முதல்வரால் விதைக்கப்பட்டிருக்கும் திட்டங்களின் விதைகள், வரும் ஆண்டுகளில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியாகவும், விவசாயிகளின் வளமாகவும், மாணவர்கள் கல்வி வாய்ப்பாகவும் பொதுமக்களின் நல்வாழ்வுக்காக மலரும்.
திரையுலகிலும், மக்கள் மன்றத்திலும் தொட்டதெல்லாம் துலங்கச் செய்த முதல்வர், இன்று 100 நாள் சாதனையை கடந்து, நூற்றாண்டு போற்றும் சாதனைகளை படைக்கப் போகிறார். இன்னும் நூற்றாண்டு பேசும் சரித்திரம் படைப்பார் பல சாதனை திட்டங்களை மக்களுக்கு வழங்கி, தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுத்து, தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றும் தங்களின் மக்கள் பணி தொய்வின்றி தொடர வாழ்த்துகிறேன்” என்றார்.