தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 18-ல் தொடங்குகிறது: பேரவைத் தலைவர் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 18-ல் தொடங்குகிறது: பேரவைத் தலைவர் அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 18-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்று பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்துள்ளது. அந்தக் கட்சியின் தலைவர் விஜய் முதல்வராக மே 10-ம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.

அமைச்சரவையில் முதல்வர் விஜய் உட்பட 35 பேர் இடம் பெற்றுள்ளனர். இதுவரை 2 முறை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜூன் 18-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் நேற்றுகூறியதாவது: சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் ஜூன் 18-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும்.

சட்டப்பேரவை கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். அதிமுகவினர் வழங்கிய மனுக்கள் ஆய்வில் உள்ளன. அதன்மீது உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும்.

பட்ஜெட் தாக்கல்

நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்வை நேரலையில் பார்த்த மக்கள், தொடர்ந்து பேரவை நடவடிக்கைகளையும் நேரலையில் காண விரும்புகின்றனர்.

அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் நேரலைக்கான பணிகள் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தொடரில் 2026-27-ம் நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. தவெக அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் என்பதால் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதற்கிடையே கடந்த காலங்களில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் காலை 10 மணிக்கு கூடியது. எனினும், மக்கள் பிரச்சினைகளை பேச கூடுதல் நேரம் தேவைப்படுவதாக கூறி, முந்தைய திமுக ஆட்சியில் பேரவை விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு 2024-ம் ஆண்டு ஜூலை முதல் காலை 9.30 மணிக்கு கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்றது. தற்போது தவெக ஆட்சியில் மீண்டும் கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கவுள்ளது குறிப்பிடத் தக்கது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 18-ல் தொடங்குகிறது: பேரவைத் தலைவர் அறிவிப்பு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 06 ஜூன் 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in