

சென்னை: தன்னை சட்டப்பேரவை அதிமுக தலைவராக அறிவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அளித்த கடிதத்தை ஏற்கக் கூடாது என்று பேரவைத் தலைவரிடம் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தனது ஆதரவாளர்களுடன், தலைமைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரனை நேற்று சந்தித்தார். அப்போது, பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள்காட்டி விளக்கி, தன்னைத்தான் பேரவை அதிமுக தலைவராக நியமிக்க வேண்டும் என்றும், எஸ்.பி.வேலுமணி அளித்த கடித்தை ஏற்கக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்தார்.
அதைத் தொடர்ந்து பழனிசாமி அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 4 ஆண்டுகால சிறப்பான ஆட்சியை நடத்தி மக்களின் பாராட்டை பெற்றவர் பழனிசாமி. தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் 1.35 கோடி வாக்குகளை பெற்று, கூட்டணியுடன் 53 இடங்கள், தனித்து 47 இடங்களை பழனிசாமி வென்று கொடுத்தார்.
இந்நிலையில், சி.வி.சண்முகம் அவதூறான தகவலை தெரிவித்துள்ளார். பழனிசாமிதான் சட்டப்பேரவை அதிமுக தலைவர் என 47 பேர் கையெழுத்திட்டு உள்ளனர் அந்த கடிதத்தை பேரவைத் தலைவரிடம் ஒப்படைத்திருக்கிறோம். எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டும் அதிகாரம் கட்சியின் பொதுச் செயலாளருக்கு மட்டும்தான் உண்டு. வேறு யாருக்கும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, “அதிமுக பொதுச்செயலாளர் ஆணைக்கிணங்க, பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு எதிராக அதிமுக வாக்களிக்கும். அது தொடர்பாக அனைத்து அதிமுக எம்எல்ஏக்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி வாக்களிப்பவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.