“செங்கோட்டையன், ஓபிஎஸ் போல் நானும் வெளியேறுவேன் என நினைக்கின்றனர்” - எஸ்.பி.வேலுமணி உருக்கம்

“செங்கோட்டையன், ஓபிஎஸ் போல் நானும் வெளியேறுவேன் என நினைக்கின்றனர்” - எஸ்.பி.வேலுமணி உருக்கம்
Updated on
1 min read

கோவை: கோவையில் இன்று (ஜூலை 28) நடந்த கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிமுகவிலிருந்து செங்கோட்டையன், ஓபிஎஸ் போல் நானும் வெளியேறுவேன் என நினைக்கின்றனர் என உருக்கமாக பேசினார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு, அதிமுகவில் தனி அணியாக செயல்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பி்ன்னர் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமியை சந்தித்து இணைந்தார். எனினும் எஸ்.பி வேலுமணியிடம் இருந்து பறிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் பதவி திருப்பி வழங்கப்படவில்லை. அதிமுக துணை பொதுச் செயலாளர் என்ற பொறுப்பு மட்டும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ஆதரவாளர்களுடன் இன்று (ஜூலை 28) மாலை ஆலோசனையில் ஈடுபட்டார்.

கட்சி கொடி,பேனர் எதுவும் இல்லாமல் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில், அதிமுக நிறுவனர் எம்ஜிஆர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகிய இருவரின் புகைப்படங்கள் மட்டும் வைக்கப்பட்டு இருந்தன. 500-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் திருமண மண்டபத்தில் திரண்டு இருந்த நிலையில், ஆதரவாளர்கள் மத்தியில் எஸ்.பி.வேலுமணி பேசினார். அப்போது சட்டப்பேரவை தேர்தல் முடிந்தவுடன் சென்னையில் 25 நாட்களாக என்ன நடந்தது? என்பது குறித்து ஆதரவாளர்களிடம் விளக்கினார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, ‘‘எந்த நேரத்திலும் உங்களுக்காக என்ன பிரச்சினை என்றாலும் நான்தான் வந்து நிற்பேன். சட்டப்பேரவைத் தேர்தலின் போது ஓ.பன்னீர்செல்வமும் நம்முடன் சேர்த்து இருந்திருந்தால் இன்னும் பலமாக இருந்திருக்கும்.

திமுகவுடன் கூட்டணி என்று சொன்னதால்தான் பிரச்சினை வந்தது. அதிமுகவை எம்.ஜி.ஆர் ஆரம்பித்தது திமுகவை எதிர்க்கத்தான். திமுகவுடன் அதிமுவை சேர்ப்பது என்பதை எப்படி ஏறறுக்கொள்ள முடியும். திமுகவுடன் யார் போனாலும் ஏற்கமாட்டோம். 30 மாவட்ட செயலாளர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதிமுகவை அழிவு பாதையில் கொண்டு செல்ல முயன்றனர். அடுத்து என்ன செய்ய வேண்டுமென நீங்க என்ன நினைக்கின்றீர்களோ அது தான் என் கருத்து.

21 வருடமாக மாவட்ட செயலாளராக இருந்திருக்கிறேன். கட்சியில் சாதாரண உறுப்பினராக கூட இருப்பேன். என்னை நம்பி வந்தவர்களுக்கு உறுதுணையாக இருப்பேன். தவறு செய்தால் கண்டிப்பாக கேட்போம். திமுக எதிர்ப்பு எப்போதும் இருக்கும். நிறைய பேர் வாட்ஸ்அப்பில் குழு உருவாக்கி என்னை கேவலப்படுத்தி வருகின்றனர். அதிமுகவிலிருந்து செங்கோட்டையன், ஓ.பன்னீர்செல்வம், ஜேசிடி பிரபாகர் என ஒவ்வொருவராக வெளியேறினர். அதுபோல நானும் வெளியே செல்வேன் என நினைக்கின்றனர்” இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர், நிகழ்ச்சி முடிந்த கிளம்பிய எஸ்.பி.வேலுமணியிடம் கூட்டம் தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, ‘‘நாங்கள் எங்களுக்குள் பேசிக்கொண்டோம். இது மீட்டிங்கே கிடையாது. தேர்தலில் பணியாற்றியவர்களுக்கு நன்றி சொன்னோம். அவ்வளவுதான்’’என்றார்.

“செங்கோட்டையன், ஓபிஎஸ் போல் நானும் வெளியேறுவேன் என நினைக்கின்றனர்” - எஸ்.பி.வேலுமணி உருக்கம்
பாஸ்போர்ட், ஆதார், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையால் குடியுரிமையை நிரூபிக்க முடியுமா?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in