

சென்னை: அந்தமான், நிகோபார் தீவுகளில் தென்மேற்குப் பருவமழை விரைவில் தொடங்க வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் தென்மேற்குப் பருவமழை, இந்த வார இறுதியில் தொடங்க வாய்ப்புள்ளது. வடக்கு இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெறக் கூடும்.
இதன் காரணமாக, இன்று (மே 13) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்திலும், 14-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்திலும், 15-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
16-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்திலும், 17-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், 18-ம் தேதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் 14, 15-ம் தேதிகளில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சூறாவளிக் காற்று: இன்று முதல் 15-ம் தேதி வரை தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் ஆழியாரில் 5 செ.மீ, ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், கோவை மாவட்டம் பெள்ளாதியில் தலா 4 செ.மீ, கோவை மாவட்டம் உபாசி, ஒத்தக்கால் மண்டபம், கோட்டூரில் தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.