

சென்னை: தென்மேற்கு பருவமழை கேரளம் மற்றும் தமிழக பகுதிகளில் நாளை தொடங்கும் நிலையில், தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு கேரள கடலோர பகுதிகளுக்கு அடுத்துள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் 5.8 கி.மீ. உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
அதேபோல் கிழக்கு மத்தியப் பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய சத்தீஸ்கர் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து வடக்கு தமிழகம் வரை விதர்பா, தெலங்கானா, ராயலசீமா வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஜூன் 8-ம் தேதி வரை ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
அதன்படி இன்று (ஜூன் 3) மற்றும் நாளை (ஜூன் 4) நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், தென்காசி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.
ஜூன் 5-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தூத்துக்குடி, விருதுநகர், ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, சிவகங்கை, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கேரளாவில் நாளை தொடக்கம்
கேரளாவில் நாளை தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அடுத்த சில நாட்கள் கேரளாவில் பலத்த மழை பெய்யும். வரும் 11-ம் தேதி மகாராஷ்டிர தலைநகர் மும்பை மற்றும் கோவாவில் பருவமழை காலம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூன் 16-ம் தேதி மகாராஷ்டிரா, தெலங்கானா, ஒடிசா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பருவமழை தொடங்கும். ஜூன் 21-ம் தேதி குஜராத், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், கிழக்கு உத்தர பிரதேசம், உத்தராகண்ட், இமாச்சல பிரதேசத்தை பருவமழை நெருங்கும். ஜூலை தொடக்கத்தில் மேற்கு உத்தர பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பருவமழை பெய்யத் தொடங்கும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் வெப்பநிலை மாற்றத்தால் ஏற்படும் இயற்கை நிகழ்வு ஆகும். எல் நினோ காரணமாக நடப்பு தென்மேற்குப் பருவமழை இயல்பைவிட குறைவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.