

சென்னை: தெற்கு ரயில்வே கடந்த நிதியாண்டில் (2025-26) செயல்பாட்டுத் திறனில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. புதிய ரயில்களின் அறிமுகம், நேர மேலாண்மை மற்றும் பயணிகளுக்கான கூடுதல் வசதிகள் என அனைத்து பிரிவுகளிலும் முதலிடம் பிடித்துள்ளது.
கடந்த நிதியாண்டில் மட்டும் 28 ஜோடி புதிய ரயில்கள் மற்றும் 2 ஒருவழி சேவைகளை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் கே.எஸ்.ஆர். பெங்களூரு – எர்ணாகுளம் வந்தே பாரத் விரைவு ரயில் மற்றும் தென்னிந்தியாவை வடக்கு மற்றும் கிழக்கு இந்திய மாநிலங்களுடன் இணைக்கும் 10 ஜோடி அம்ரித் பாரத் விரைவு ரயில்கள் அடங்கும்.
மேலும் 12 ஜோடி மெயில், விரைவு ரயில்களும், புறநகர் பயணிகளின் வசதிக்காக 7 ஜோடி பாசஞ்சர் மற்றும் மெமு ரயில்களும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. கடந்த நிதியாண்டில், ஒட்டுமொத்த நேர மேலாண்மையில் 93.22 சதவீதம் பெற்று சாதனை படைத்துள்ளது.
மெயில், விரைவு மற்றும் புறநகர் ரயில்கள் என அனைத்தையும் உள்ளடக்கிய இந்த விகிதத்தில், இந்தியாவிலுள்ள அனைத்து ரயில்வே மண்டலங்களையும் விட தெற்கு ரயில்வே முதலிடம் பிடித்துள்ளது. இப்பட்டியலில் மேற்கு ரயில்வே 2-வது இடத்தையும், வடமேற்கு ரயில்வே 3-வது இடத்தையும் பிடித்துள்ளன.
அதேபோல, மெயில், விரைவு ரயில்களை மட்டும் கணக்கில் கொண்டால், தெற்கு ரயில்வே 91.3 சதவீதம் நேர மேலாண்மையுடன் இந்திய அளவில் 3-வது இடத்தைப் பெற்றுள்ளது. இத்தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.