

சென்னை: இந்திய ரயில்வேயின் மிகப்பழமையான மண்டலங்களில் ஒன்றான தெற்கு ரயில்வே இன்று (ஏப்.14) 75-வது நிறுவன தினத்தைக் கொண்டாடுகிறது.
மெட்ராஸ் மற்றும் தென் மராட்டிய ரயில்வே, தென்னிந்திய ரயில்வே மற்றும் மைசூர் மாநில ரயில்வே ஆகிய 3 அமைப்புகளை ஒன்றிணைத்து தெற்கு ரயில்வே கடந்த 1951-ம் ஆண்டு ஏப்.14-ம் தேதி உருவாக்கப்பட்டது.
தென்னிந்தியாவில் ரயில்வேயின் வரலாறு 1856-ல் ராயபுரம் முதல் ஆற்காடு (வாலாஜா ரோடு) வரை இயக்கப்பட்ட முதல் ரயிலிலிருந்து தொடங்குகிறது.
பரிணாம வளர்ச்சி
1860-களில் மேற்கு கடற்கரை இணைப்பு, 1870-களில் மும்பை இணைப்பு மற்றும் 1900-களில் ஹவுரா இணைப்பு எனத் தேசிய அளவில் இது விரிவடைந்தது. 1899-ல் நீலகிரி மலை ரயில் மற்றும் 1925-ல் பாம்பன் பாலம் போன்றவை பொறியியல் அதிசயங்களாகத் திகழ்ந்தன.
நிர்வாக வசதிக்காக, 1966-ல் தென் மத்திய ரயில்வேயும், 2003-ல் தென் மேற்கு ரயில்வேயும் பிரிந்து உருவாகின. தற்போது சென்னை, மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய 6 கோட்டங்களுடன் 5,100-க்கும் மேற்பட்ட கிலோ மீட்டர் தூரத்துக்குத் தெற்கு ரயில்வே சேவை வழங்குகிறது.
பல்வேறு பாரம்பரியம் மற்றும் சிறப்புகளைக் கொண்ட தெற்கு ரயில்வே தனது 75 ஆண்டுக்காலப் பயணத்தைக் கொண்டாடும் வேளையில், தெற்கு ரயில்வே பாரம்பரியத்தைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், நவீன தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் பயணிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த வசதிகளை வழங்குவதில் உறுதியாக உள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.