

அண்மையில் திமுக-வில் தன்னை இணைத்துக் கொண்ட அதிமுக-வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், இன்று மதுரை திருமங்கலத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இணைப்பு விழாவில் தனது விசுவாசிகளையும் கொண்டு வந்து திமுக-வில் கலக்கிறார்.
ஓபிஎஸ் தங்கள் பக்கம் வந்ததை திமுக தலைமை சரித்திர நிகழ்வு போல் சித்தரிக்கிறது. ஆனால், தென் மாவட்ட திமுக-வினர் மத்தியில் ஓபிஎஸ் வருகையானது அலுப்பையும் சலிப்பையுமே உண்டாக்கி இருக்கிறது. இதுகுறித்து நம்மிடம் பேசிய தென் மாவட்ட திமுக நிர்வாகிகள் சிலர், ‘‘அதிமுக-வில் இருந்து வருகிறவர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் கட்சி தலைமை, அவர்களுக்கு ஏற்கெனவே கட்சியில் இருக்கும் நிர்வாகிகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர் பதவிகளை வாரி வழங்குகிறது.
இதனால், இன்றைய தேதியில் ஆளும் கட்சி திமுக-வாக இருந்தாலும் ஆட்சி செய்பவர்களில் பெரும்பகுதியினர் முன்னாள் அதிமுக-வினராகவே இருக்கிறார்கள். அந்த வரிசையில் ஓபிஎஸ்ஸையும் சேர்க்கிறார்கள். இவருக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப் போவதாகவும் அடுத்த ஆட்சியில் அவரை சபாநாயகராக அமர்த்தப் போவதாகவும் செய்திகள் வருகின்றன. ஓபிஎஸ் வருகையால் முக்குலத்தோர் வாக்குகளைப் பெறலாம் என திமுக தலைமை தப்புக் கணக்குப் போடுகிறது.
ஆனால் முக்குலத்தோர், சசிகலா, டிடிவி.தினகரனையே அவ்வளவாக நம்புவதில்லை. ஜெயலலிதாவிடம் இருந்த காரணத்தால் இவர்களை எல்லாம் முக்குலத்தோர் ஆதரித்தார்கள். இப்போது ஓபிஎஸ் திமுக-வுக்கு வந்துவிட்டதாலேயே அவரை ஆதரித்த முக்குலத்தோரும் அப்படியே திமுக-வை ஆதரிப்பார்கள் என்று சொல்வதற்கில்லை. ஆக, ஓபிஎஸ் வருகை என்பது திமுக-வுக்கு எக்ஸ்ட்ரா லக்கேஜ் தானே தவிர எனர்ஜி பூஸ்டரெல்லாம் இல்லை” என்றனர்.
மதுரை அதிமுக நிர்வாகிகளோ, ‘‘என்றைக்கு ஓபிஎஸ் திமுக புகழ் பாட ஆரம்பித்தாரோ அன்றைக்கே அவருக்கு பின்னால் கொஞ்ச நஞ்சமிருந்த முக்குலத்தோரும் அதிமுக-வுக்கு வந்துவிட்டார்கள். அதிமுக-வினர் 80 சதவீதம் பேர் இன்று ஸ்டாலின் நிகழ்ச்சியில் திமுக-வில் இணையப் போவதாக ஓபிஎஸ் சொல்லி இருக்கிறார்.
அப்படி அதிமுக-வினர் 80 சதவீதம் பேர் அவருக்குப் பின்னால் இருப்பது உண்மையானால் அவர் தனிக்கட்சியே ஆரம்பித்திருக்கலாமே... எதற்காக திமுக-வுக்கு வால் பிடிக்க வேண்டும்? ஓபிஎஸ் நடத்திய இரண்டு தர்மயுத்தங்களிலும் அவருக்குப் பின்னால் நின்றவர்களில் 90 சதவீதம் பேர் அவரது போக்குப் பிடிக்காமல் ஏற்கெனவே அதிமுக-வில் இணைந்து விட்டார்கள். எஞ்சிய ஒரு சிலர் மட்டும் தவெக, திமுக, பாஜக என பல கட்சிகளுக்கும் போயிருக்கிறார்கள்.
ஓபிஎஸ்ஸுக்கு சொந்த மாவட்டத்திலேயே இப்போது செல்வாக்கு இல்லை. அதனால் தான் மதுரை மாவட்டத்தில் இணைப்பு விழாவை நடத்துகிறார். தலைமை சொல்லி விட்டது என்பதற்காக தேனி மாவட்ட திமுக-வினர் ஓபிஎஸ்ஸுடன் கைகுலுக்கி இருக்கிறார்கள். ஆனால், அவருடன் எதிர்ப்பு அரசியல் நடத்தியே பழகிவிட்ட தங்க தமிழ்ச்செல்வன் போன்றவர்கள் அவரை இங்கேயும் ஜெயிக்க வைப்பார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சொந்த மாவட்டத்திலேயே ஓபிஎஸ் நிலைமை இப்படி என்றால் மற்ற மாவட்டங்களில் கேட்கவே வேண்டாம்” என்கிறார்கள்.