

சென்னை: தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காததால் மதிமுக தென் சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் கழக.குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மீது அதிருப்தியை வெளிப்படுத்தி மதிமுக தென்சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் கழக.குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.
இதுகுறித்து கழக.குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திராவிட இயக்க கொள்கைகளை ஏற்று திமுகவில் பயணித்து வந்த நான், 1994-ல் வைகோவின் உணர்ச்சிகரமான பேச்சுகளைக் கேட்டு அவருடன்பயணித்தேன்.
வைகோவுடன் பேரணி, நடை பயணம் போராட்டங்கள் என நெருக்கடி காலத்திலும் கடந்த 32 ஆண்டு காலம் அவருடன் பயணித்தேன். கழகமே குடும்பமாக இயங்கிவந்த எனக்கு உரிய அங்கீகாரம் கொடுப்பேன் என அவர் வாக்குறுதி அளித்தார்.
கடும் மனஉளைச்சல்
2021 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கவில்லை. அதற்கு, ‘தவறு செய்து விட்டேன். நிச்சயம் வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவேன்’என அப்போது வாக்குறுதி அளித்தார்.
தற்போது நடைபெற உள்ள தேர்தலில் வாய்ப்பளிப்பதாக 4 மாதங்களுக்கு முன்பே உறுதியளித்தார். ஆனால் இந்த தேர்தலிலும் எனக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதால், கடுமையான மன உளைச் சலுக்கு ஆளாகி உள்ளேன்.
எனவே, நான் இதுவரை கட்சியில் வகித்துவந்தஆட்சி மன்றக் குழு உறுப்பினர், மாவட்டச் செயலாளர் ஆகிய பொறுப்புகளை நான் மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் ராஜினாமா செய்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.