

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வாலாஜாபாத் அருகே உள்ள அவளூர் பகுதியில் நல்ல நிலையில் உள்ள ஓடைப் பாலத்தை நெடுஞ்சாலைத் துறையினர் இடிக்க வந்தபோது சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிகாரிகளுடன் அவர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தில் இருந்து திருப்புலிவனம் செல்லும் பாதையில் கன்னடியன் குடிசை - அவளூர் ஊராட்சி இடையே பாலாற்றின் குறுக்கே புதிய உயர்மட்டப் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பாலத்தின் தென்கரையில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஓடைப் பாலம் உள்ளது.
இந்தப் பாலத்தையும் அகற்றிவிட்டு புதிய பாலம் அமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் முடிவு செய்துள்ளனர். ஆனால், ‘இந்தப் பாலம் நல்ல நிலையில் உறுதியுடன் இருப்பதாகவும், ஏதேனும் ஒரு பணி செய்ய வேண்டும் என்பதற்காக இந்தப் பாலத்தை இடித்து மறுபடி கட்டக் கூடாது. மக்களுக்கு பயனுள்ள பணிகளை செய்ய வேண்டும்’ என்று எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், இந்தப் பாலத்தை அப்புறப்படுத்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் வந்தபோது, அப்பகுதி சமூக ஆர்வலர்கள் வழக்குரைஞர் சி.குப்தராஜன் தலைமையில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்களுக்கும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இது குறித்து வழக்குரைஞர் சி.குப்தராஜன் கூறும்போது, “பாலாற்றின் குறுக்கே புதிய பாலம் அமைக்கும் திட்டத்தை அனைவரும் வரவேற்கிறோம். அதேநேரம், அப்பாலத்தின் அருகே அமைந்துள்ள பி-ஆறு ஓடைப் பாலம் தற்போது வரை உறுதியுடன் உள்ளது. எனவே, நல்ல நிலையில் உள்ள பாலத்தை இடித்துவிட்டுப் புதிய பாலம் அமைப்பது அரசின் நிதிச் செலவினத்தை அதிகரிக்கும் செயலாகும்.
இந்தத் திட்டத்துக்கு எவ்வாறு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள இந்தத் திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை, தொழில்நுட்ப அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பான விவரங்களைக் கோரி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அளித்துள்ளோம். இந்தப் பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் அமைப்பது தொடர்பாக உரிய துறைசார் ஆய்வுகளை மேற்கொண்ட பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றார்.