

நயினார் நாகேந்திரன்
சென்னை: நவோதயா பள்ளிகளுக்கு நிலம் ஒதுக்கக் கோரிய உச்ச நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தள பதிவில் அவர், “தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளைத் தொடங்க நிலங்களை அடையாளம் காணுமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை தமிழக பாஜக முழுமனதுடன் வரவேற்கிறது. மத்திய அரசின் முழு நிதியுதவியுடன் செயல்படும் நவோதயா பள்ளிகள், கிராமப்புற ஏழை மாணவ, மாணவிகளுக்குத் தங்கும் வசதியுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த இலவசக் கல்வியை உறுதி செய்கின்றன.
அதேபோல், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அடித்தட்டு மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் தரமான சிபிஎஸ்இ கல்வியை வழங்குகின்றன.
எனவே, தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்துள்ள முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, பழைய குறுகிய அரசியல் கண்ணோட்டத்தைத் தொடராமல், மாணவர்களின் எதிர்கால நலனை முன்னிறுத்தி நவோதயா மற்றும் புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைத் தொடங்க உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.
உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள 3 மாத கால அவகாசத்துக்குள் அனைத்து மாவட்டங்களிலும் நவோதயா பள்ளிகளுக்கான நிலங்களை அடையாளம் கண்டு உடனடியாக ஒதுக்கீடு செய்வதோடு, புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைத் தொடங்குவதற்கும் போர்க்கால அடிப்படையில் தேவையான நிலங்களை தவெக அரசு வழங்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.