

புதுச்சேரி: காணாமல் போன செஞ்சி சிறுமியை கண்டுபிடிக்க இருசக்கர வாகனத்தில் பேனர் கட்டி தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் சமூக ஆர்வலர் ஏமுமலை.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி ஊராட்சி நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருந்தார். இந்த சிறுமி தனது பிறந்தநாளை, அக்டோபர் 11-ம் தேதி கொண்டாடினார். பின்னர், பெற்றோருடன் வீட்டில் தூங்கிய சிறுமி, மறுநாள் (அக்.12) அதிகாலை மாயமானார்.
அவரை தேடும் பணிகள் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். முதலில் உள்ளூர் போலீஸார் விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதன்பின், சிபிசிஐடி போலீஸார், பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும், சிறுமியை இன்னும் கண்டறிய முடியவில்லை.
இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் பேனர் கட்டிக் கொண்டு, காணாமல் போன சிறுமியை கண்டுபிடிக்க உதவுமாறு ஊர் ஊராக வலம் வந்து கொண்டிருக்கிறார் புதுச்சேரி சேந்தநத்தத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஏழுமலை.
அவர் தனது வாகனத்தில் கட்டியுள்ள பேனரில் ‘காணாமல் போன 7 வயது சிறுமி விரைவில் கிடைக்க நாம் இறைவனை பிரார்த்தனை செய்வோம். சிறுமி கிடைக்கும்வரை பெற்றோர்களில் ஒருவனாக தமிழகம் முழுவதும் எனது விழிப்புணர்வு சுற்றுப்பயணம் தொடரும்’ என எழுதியுள்ளார்.
இவர், இன்று புதுச்சேரியில் கிராமப் பகுதிகளுக்கு சென்றார். மக்கள் கூடும் இடங்களில் வண்டியை நிறுத்தி, அங்கிருப்போரிடம், “இந்த பேனரில் உள்ள சிறுமியை எங்கேனும் பார்த்தீர்களா” என்று விசாரிக்கிறார். “பார்த்தால் போலீஸாரிடம் சொல்லுங்கள்” என்கிறார்.
இதுதொடர்பாக அவர் கூறியது: “மனித உணர்வு அடிப்படையில் தமிழகம் முழுவதும் விழிப்புணரவு பயணம் செய்கிறேன். போலீஸார், சிபிசிஐடி தரப்பில் தேடுகின்றனர். 25 நாட்களாகி விட்டது. குழந்தை கிடைக்கவில்லை. இது யாருக்கோ நடந்தது என கடந்து செல்ல முடியவில்லை. மனசு கஷ்டமாக இருந்ததால் இப்படிச் செய்கிறேன். பஸ் ஸ்டாண்ட், டீக்கடைகளில் விசாரிக்கிறேன்.
என்னை கடந்து செல்வோரிடம் கேட்கிறேன். மாணவர், மாணவிகளிடம் விசாரிக்கிறேன். சிறுமி மாயமானது குறித்து தகவல் சொல்கிறேன். விழுப்புரம், மரக்காணம், கடலூர், வளவனூர் பகுதிகளுக்குச் சென்றுவிட்டு, தற்போது புதுச்சேரி வந்துள்ளேன். சொந்த காசில் பெட்ரோல் போட்டுதான் செல்கிறேன். பின்னணியில் யாரும் இல்லை. எந்த அரசியலும் இல்லை.
தீபாவளி வரவுள்ளது. அந்தக் குழந்தையின் மனநிலையை நினைத்துப் பார்க்கிறேன். அனைவரும் ஒன்று சேர்ந்து குழந்தையை கண்டறிவதில் உதவ வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு திரண்டதுபோல் இதற்கும் மக்கள் இணைந்து சிறுமியை கண்டறிய உதவ வேண்டும். இதர மாநில காவல் துறையும் இவ்விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்” என்று அவர் கூறினார்.