தவெகவின் 6 மாத கால ஆட்சி எப்படி? - ஒரு விரைவுப் பார்வை

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய்

Updated on: 
4 min read

தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றே இல்லை என்ற அளவுக்கு ஒரு சாம்ராஜ்ஜியத்தை நடத்திக் கொண்டிருந்தன திமுகவும், அதிமுகவும். மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சியில் இருக்கும் பாஜகவுக்கே கூட தமிழகத்தில் கூட்டணி ஆட்சியமைப்பது என்பதுகூட கைகூடவில்லை. மோடியின் தமிழக வருகைகள், அமித் ஷாவின் வியூகங்கள் எல்லாம் சிங்கிள் எம்எல்ஏவை மட்டும்தான் அக்கட்சிக்குப் பெற்றுத் தந்தன.

ஆனால், கட்சி ஆரம்பித்து 2 ஆண்டுகளிலேயே திமுக, அதிமுகவுக்கு அதிரடி ஷாக் கொடுத்து அரியணை ஏறினார் தவெக தலைவர் விஜய். கருர் துயரத்தால் தவெக தலைதூக்காது என்று கூறப்பட்ட நிலையில், ஆட்சியும் அமைத்து இப்போது 6 மாதங்களும் நிறைவடைந்து விட்டன. இந்த நிலையில், தவெக ஆட்சியின் பலமாகவும், பலவீனங்களாகவும் அரசியலிலும், பொது வெளியிலும் பேசப்படுபவை பற்றிய விரைவுப் பார்வையை செலுத்துவோம்.

“தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு ஐசியு-வில் உள்ளது. ஆட்சி நிர்வாகம் கோமாவில் உள்ளது” என்று தவெக ஆட்சியை விமர்சித்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். தமிழகத்தில் தீபாவளி அன்று ஒரே நாளில் நடந்த பல்வேறு கொலைச் சம்பவங்களை சுட்டிக்காட்டி சட்டம் - ஒழுங்கு நிலையை கேள்விக்கு உள்ளாக்கும் வகையில் அவர் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

“ஒரு மாவட்டத்தின் மக்கள், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் ஆட்சியர். அந்த ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லை; அதுவும் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினரிடம் இருந்தே! தமிழக முதல்வருக்கு இது கேவலம்!” என்று வசைபாடியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் செல்போனில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரை முன்வைத்து இவ்வாறாகக் கூறியுள்ளார் அவர்.

மேகேதாட்டு விவகாரம், மின்சார கொள்முதல் பிரச்சினை, அரிசி விலை உயர்வு எனப் பல்வேறு விவகாரங்களையும் சுட்டிக் காட்டி பல்வேறு கட்சிகளும் தவெகவை அன்றாடம் விமர்சித்துதான் வருகின்றன. ஆட்சிக்கு ஆதரவு நல்கிய இடதுசாரிகளும் விமர்சனங்களில் குறைவைப்பதில்லை. நாதகவின் சீமான், தேமுதிகவின் பிரேமலதா என தவெக விமர்சகர்கள் பட்டியலில் இன்னும் நிறைய பேர் இருக்கின்றனர்.

இப்படியான சூழலில், ‘3 மாதங்கள் கூட தவெக ஆட்சி தாக்குப் பிடிக்காது’ என்ற ஏளனப் பேச்சுக்களை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு முழுதாக 6 மாதங்களை நிறைவு செய்திருக்கிறது விஜய் தலைமையிலான தவெக அரசு.

தவெக ஆட்சியின் ஆறு மாத காலம் பற்றி அரசியல் பார்வையாளர் ஒருவர் கூறும்போது, “தேர்தலில் அளிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளில் சிலவற்றை நிறைவேற்றியுள்ளது. சிலதை பகுதியாக நிறைவேற்றியுள்ளது. பத்திரப் பதிவுத் துறை, லைசன்ஸிங் போன்றவற்றில் ஊழல் ஒழிப்பை ஓரளவுக்கு எட்டியிருக்கிறது இந்த அரசு. ஆனால், தமிழகத்தில் தற்போதைய சட்டம் - ஒழுங்கு நிலவரம் உண்மையில் இந்த ஆட்சிக்கு மிகப் பெரிய சவால்தான்.

இன்று விஜய் ஆட்சி 6 மாதங்களை நிறைவு செய்திருக்கலாம். செஞ்சியில் சிறுமி மாயமாகி இன்றுடன் 30 நாட்கள் ஆகிறது. அந்த சிறுமியைக் கண்டுபிடித்திருந்தால், குறைந்தபட்சம் வழக்கில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும் கூட தவெக ஆட்சியில் பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு மேம்பட்டிருப்பதாகச் சொல்லியிருப்பேன்.

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதிலும் தவெக அரசு குறிப்பிடத்தக்க அளவில் செயல்படவில்லை. இவை எல்லாவற்றையும் விட ஊழல் முகம் கொண்ட மாற்றுக் கட்சியினரை, குறிப்பாக அதிமுகவில் இருப்பவர்களை தவெகவுக்கு தொடர்ந்து இழுப்பது குதிரை பேர குற்றச்சாட்டுகளை மெய்ப்பித்துக் கொண்டே செல்லும்” என்றார்.

இந்தச் சூழலில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் இன்று சட்டம் - ஒழுங்கு விவகாரம் தொடர்பாக முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தவெக ஆட்சி குறித்து கல்லூரி மாணவி ஒருவர் கூறும்போது “அரசியலுக்குப் புதிது, ஆட்சிக்கும் புதிது. நிச்சயமாக அவர்களே சொல்லிக் கொண்டதுபோல் தூய சக்தியாகத்தான் இருப்பார்கள் என்றுதான் மக்களுக்கு தவெகவுக்கு வாக்களித்தனர். அந்த நம்பிக்கையின் நிலை இனிதான் தெரியவரும்.

ஜனநாயக ரீதியில் வென்றவர்களை ஜனநாயக ரீதியில்தான் எதிர்கொள்ள வேண்டும். இந்த ஆட்சியில் இதுவரை எனக்கு சாதனைகளைவிட சறுக்கல்களே அதிகமாக இருப்பதாகத் தோன்றுகிறது. இளைஞர்களின் நம்பிக்கையில் விஜய் தனது நாற்காலியை கட்டி எழுப்பியுள்ளார். இளைஞர்களுக்காக அவர் உரக்கப் பேச வேண்டும். பத்திரிகையாளார்களை சந்திக்க வேண்டும். சிஎம் பதவிக்கான ஹீரோயிஸத்தையும் அவர் காட்ட வேண்டும்” என்றார்.

தமிழகத்தில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம், தாய்மாமன் தங்க மோதிர திட்டம், திருமண உதவித் திட்டம், ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர் திட்டம், வெற்றிப் பயணத் திட்டம் விரிவாக்கம் எல்லாம் பெண்கள் மத்தியில் தவெக அரசுக்கு அபிமானத்தை கூட்டியுள்ளதாகவே தெரிகிறது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களையும் போதைப்பொருள் குற்றங்களையும் தடுப்பதற்குப் புதிதாக 30 நீதிமன்றங்களைத் தொடங்கத் தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

சமூக நீதி (சாதிவாரி) ஆய்வை மேற்கொள்வதற்கான முன்னெடுப்புகளைத் தமிழக அரசு தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் 69% இடஒதுக்கீட்டைப் பேணவும், அதைத் தக்கவைத்துக்கொள்ளவும், இடஒதுக்கீட்டின் பலன் உரியவர்களுக்குக் கிடைக்கவும் தேவையான சாதி சார்ந்த தரவுகள் இந்த ஆய்வின் மூலம் அரசுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வருவாய் இழப்பு உள்ளிட்ட பின்னடைவுகளைக் கண்டுகொள்ளாமல், மாநகரங்களிலும் நகரங்களிலும் குளிர்சாதனப் பேருந்து தவிர அனைத்து வகையான பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றிப் பயணம் செய்யும் வகையில் பெண்களுக்கான கட்டணமில்லாப் பேருந்துத் திட்டத்தைத் தமிழக அரசு விரிவுபடுத்தியிருப்பது மிக முக்கிய சாதனையாகப் பார்க்கலாம்.

<div class="paragraphs"><p>மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்&nbsp;&nbsp;‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தபோது.</p></div>

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்  ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தபோது.

நீண்ட காலமாக திமுக விசுவாசியாக வாக்களித்த ஒரு மூதாட்டி, கடந்த தேர்தலில் தவெகவுக்காக வாக்களித்ததாகக் கூறினார். ஏன் என்று கேட்டபோது, “மாதம் ரூ.2500 வருமென்று ஓட்டுபோட்டேன்” என்றார். அவரைப் போல் வறுமையில் உள்ள பல பெண்களுக்குமே ரூ.2,500 வாக்குறுதி இன்னும் செயல்படுத்தப்படாதது எத்தனை பெரிய அதிருப்தி என்பதை முதல்வர் விஜய் உணர்ந்திருக்கிறாரா என்பது தெரியவில்லை. எனினும், அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான பணிகள் நடந்து வருவதாக அமைச்சர்கள் சிலர் அவ்வப்போது கூறி வருவதும் கவனிக்கத்தக்கது.

“60 ஆண்டுகளாக மாறி, மாறி ஆட்சி செய்தவர்களை அப்புறப்படுத்த தவெக மெகா வாக்குறுதிகளை அள்ளி வீசியது. எளிமையான பின்னணி கொண்டவர்கள் பலரும் எம்எல்ஏக்கள் ஆனது எல்லாம் வரவேற்கத்தக்கதுதான். ஆனால், அவர்கள் தமிழை வாசிக்க தத்தளிப்பதையும், கஞ்சா தொடங்கி ஆபாச குறுஞ்செய்தி வரை சர்ச்சைகளில் சிக்குவதையும், போகிற போக்கில் பொறுப்பற்றுப் பேசுவதையும் எதிர்க்கட்சிகள் எவ்வளவு விமர்சித்தாலும் மக்கள் அதீத கருணையுடன் இந்த ஆட்சிக்கு அவகாசம் கொடுத்து வருகிறார்கள். நாம் தானே வாக்களித்தோம். அவகாசம் கொடுத்தால் கற்றுக் கொள்வார்கள் என்று பொறுமை காக்கிறார்கள்.

ஆட்சி நிர்வாகத்தில் சில மெனக்கிடல்களை முன்னெடுத்து, முதல்வர் பதவியில் விஜய் இன்னும் அழுத்தமாக செயல்பட்டால் மட்டுமேதான் 2029 மக்களவை தேர்தலில் மக்கள் மீண்டும் தவெக பக்கம் நிற்பார்கள்” என்கிறார் சமூக ஆர்வலர் ஒருவர்.

இவை எல்லாவற்றையும்விட “பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் முதன்மையான மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழகம், தவெக ஆட்சியில் தொடர்ந்து சரிவைச் சந்தித்துக் கொண்டிருப்பது கவலை அளிக்கிறது. அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாயில் கேரளா 23%, ஆந்திரா 24%, கர்நாடகா 18%, தெலங்கானா 14% என அண்டை மாநிலங்கள் இரட்டை இலக்கத்தில் வளர, தமிழ்நாடு வெறும் 3% வளர்ச்சியோடு பின்தங்கியுள்ளது” என்று முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பகிர்ந்த வேதனை, பல்வேறு பொருளாதார நிபுணர்கள் மத்தியிலும் பிரதிபலிக்கிறது.

புதிய அரசு பொருளாதார வளர்ச்சியில் இன்னும் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும். கடந்த ஆட்சியாளர்கள் கஜானாவை காலியாக விட்டுச் சென்றனர் என்பதெல்லாம் வெகு காலம் மக்கள் மத்தியில் எடுபடாது. இப்போதே அதன் அதிர்வலைகள் சிறு, குறு, நடுத்தர தொழில்துறையினர் மத்தியில் எதிர்ப்புக் குரல்களாகக் கிளம்பத் தொடங்கியுள்ளன. அரசு பொருளாத வளர்ச்சியை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது என்று அவர்கள் கூறுகின்றனர்.

விஜய் ஆட்சிக்கு மட்டுமல்ல, புதிதாக ஆட்சிக்கு வருபவர்களுக்கும் இதுபோன்ற சவாலான களமே இருக்கும் என்றாலும், அரசியலுக்கே புதிதான தவெகவுக்கு இது கூடுதலான சவாலே. இருந்தாலும், இன்னும் நான்கரை ஆண்டுகள் தவெகவிடம் இருக்கின்றன. அதற்குள் தன்னைத் தகவமைத்துக் கொள்ள தவெகவுக்கு நிறையவே வாய்ப்புகள் இருக்கின்றன. 6 மாத ஆட்சி என்பது ஆரம்பநிலைதான் என்பதால், இப்போதே முடிவுக்கு வர முடியாது என்பது சில அரசியல் நோக்கர்களின் நிலைப்பாடாகவும் உள்ளது.

ஆறு மாதங்கள் என்பது பொதுவாக புதிய ஆட்சிக்கான தேனிலவு காலம் என்பார்கள். ஆனால், இந்தக் காலகட்டத்தில் தவெக பல முக்கிய சவால்களை சந்தித்துள்ளதையும் மறுக்க முடியாது. தவெக ஆட்சிக்கு இப்போது உள்ள மிக முக்கிய சவால், சட்டம் - ஒழுங்கு பிரச்சினைதான். போதைப்பொருள் புழக்கம், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் இந்த ஆட்சிக்கான புதிய தலைவலியாக மாறி நிற்கிறது. விஜய் ஆட்சியில் மாற்றம் வரும் என அவருக்கு வாக்களித்தவர்கள் நம்பினார்கள். ஆனால், தினம் தினம் அதிகாரிகள் மாற்றம்தான் நடக்கிறதே தவிர, குற்றங்கள் குறைந்தபாடில்லை என்று மக்களிடமே பேச்சு எழ தொடங்கிவிட்டது.

அதேபோல பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் விவசாயிகள் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள் என பல தரப்பினரின் போராட்டங்களும் கவனிக்க வைத்தன.

எனினும், ‘லஞ்சம் - ஊழல் இருக்காது’ என்பதுதான் தவெகவின் மிக முக்கியமான முழக்கம். அது கொஞ்சம் நிறைவேறியுள்ளது என்றுதான் சொல்லவேண்டும். அந்த வகையில் மக்களிடம் இந்த அரசு மீது ஒரு நம்பிக்கை உள்ளது.

அதேபோல, ஒப்பந்தங்களில் ஊழல் குறையும், பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் லஞ்ச லாவண்யங்கள் குறையும் என்றும் அமைச்சர்கள் உறுதி தந்துள்ளனர். இவையெல்லாம் நிறைவேறி சமானிய மக்களுக்கும் இவற்றின் பலன் கிடைத்தால், தவெக ஆட்சிக்கு மக்கள் தம்ப்ஸ் அப் கொடுக்க வாய்ப்புள்ளது.

<div class="paragraphs"><p>முதல்வர் விஜய்</p></div>
‘என்விடியா’ ஜென்சனின் ரகசிய உறவு ‘அமெரிக்க பாதுகாப்பு’ பிரச்சினையாக மாறியது ஏன்?

X